ashes test match x page
கிரிக்கெட்

100 வருட ஆஷஸ் வரலாற்றில் முதல்முறை.. மிரட்டிய ஸ்டார்க், ஸ்டோக்ஸ்! மல்லுக்கட்டிய ஆஸி., இங்கி அணிகள்!

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் ஒரே நாளில் 19 விக்கெட்களை இழந்துள்ளன.

Rajakannan K

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் ஒரே நாளில் 19 விக்கெட்களை இழந்துள்ளன.

இந்தியா - பாகிஸ்தான், மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற RIVALARY மோதல்களுக்கு எல்லாம் முதன்மை என்றால், அது ஆஷஸ் தொடர்தான். உலகக்கோப்பையைவிட ஆஷஸ் தொடரை வெல்வதே முக்கியம் என இரு அணி வீரர்களும், இரு நாட்டு ரசிகர்களும் எண்ணும் அளவுக்கு, இந்தத் தொடர் கௌரவப் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. 1882-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த மோதல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையென கடுகளவும் சுவாரஸ்யத்துக்குக் குறைவின்றி நடைபெற்று வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டெல்லாம் அழிஞ்சு போச்சு, இனிமே டி20 பார்மெட் கிரிக்கெட் என்று சொல்லிய பலரது வாயையும் அடைத்து வருவதுதான் ஆஷஸ் டெஸ்ட் தொடர். அதற்கு மைதானங்களில் குறைவில்லாமல் கூடும் கூட்டங்களே சாட்சி.

aus vs eng captains

ஆஷஸ் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்த்தால், கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து அணி, 1882ஆம் ஆண்டு தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து செய்தித் தாள், ’இங்கிலாந்து கிரிக்கெட் இறந்துவிட்டது, ஓவல் மைதானத்தில் புதைக்கப்பட்டு, அதன் சாம்பல் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது’ என கூறியது. இதனால்தான் இந்த தொடருக்கு ’ஆஷஸ்’ என பெயரிடப்பட்டது.. அன்றிலிருந்து இன்றுவரை ஆஷஸ் தொடர் ஒரு மானப்பிரச்சினையாக இரு நாட்டுக்கும் மாறியுள்ளது. நூற்றாண்டுகளைக் கடந்துள்ள ஆஷஸ், தற்போது BAZBALL கோட்பாட்டுக்கும் - உலக டெஸ்ட் சாம்பியனுக்குமான மோதலாக அமைந்துள்ளது.

இதுவரை, மொத்தம் 73 ஆஷஸ் தொடர் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 34 தொடர்களை ஆஸ்திரேலியாவும், 32 தொடர்களை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன. 7 தொடர்கள் டிராவில் முடிந்துள்ளன. இரு அணிகளுக்கும் இடையே 361 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 152 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 110 போட்டிகளில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 99 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

இந்நிலையில்தான், ஆஸ்திரேலியா சென்றுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, நவம்பர் 21 முதல் ஜனவரி 8-ஆம் தேதிவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் பாட் கம்மின்ஸுக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவை வழிநடத்துகிறார். இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

Mitchell Starc

பெர்த் மைதானத்தில் இன்று மிட்செல் ஸ்டார்க் எனும் சூறாவளி வீசியது. ஸ்டார்க் சூறாவளியின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். விக்கெட் மழைவிடாமல் தூறியது. கிராவ்லி, ஜோ ரூட் டக் அவுட் ஆகினர். கேப்டன் ஸ்டோக்ஸ் 6 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஹேரி ப்ரூக் 52 ரன்களுடன் அரைசதம் அடிக்க, ஒல்லி போப் 46, விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் 33 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப இங்கிலாந்து அணி 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட் சாய்த்து அசத்தினார். தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் கேரியரில் சிறந்த பந்துவீச்சை அவர் இன்று நிகழ்த்தினார். இதற்கு முன்பு ஒரு இன்னிங்ஸில் 6 விக்கெட் வீழ்த்தியதுதான் அதிகபட்சமாக இருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று மைதானத்தில் கதகளி ஆடினர், இங்கிலாந்து பவுலர்கள். தொடக்கத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ப்ரைடன் கார்ஸ் அடுத்தடுத்து தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்ட, பின்னர் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தை கையில் எடுத்து விக்கெட் மழை பொழிந்தார். எந்தவொரு ஆஸ்திரேலிய வீரரும் 30 ரன்களைகூட எட்டவில்லை. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 26, கேமரூன் க்ரீன் 24, டிராவிஸ் ஹெட் 21 ரன்கள் எடுத்தனர். கேப்டன் ஸ்மித் 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். முதல்நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது.

ben stokes

பெர்த் மைதானத்தில் தொடக்கம் முதல் இறுதிவரை விக்கெட் மழை நிற்கவேயில்லை. ஒரே நாளில் 19 விக்கெட்கள் சாய்ந்துள்ளன. அதாவது, 100 வருட ஆஷஸ் வரலாற்றில் முதல் நாளில் அதிக விக்கெட் வீழ்த்தப்பட்ட சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2001ஆம் ஆண்டு ட்ரெண்ட் ப்ரிட்ஜ் மைதானத்திலும் 2005ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்திலும் 17 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருந்தன. ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால், கேப்டவுனில் இந்தியா - தென்னாப்ரிக்கா இடையே 2024ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில்தான் ஒரேநாளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருந்தன. அதன்பிறகு 2019ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து - அயர்லாந்து இடையேயான போட்டியில் 20 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருந்தன. அதேபோல், நடப்பாண்டிலும் முல்டானில் பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் இடையே நடைபெற்ற போட்டியிலும் 20 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டிருந்தன. அதன்பிறகு மோசமான விக்கெட் வீழ்ச்சி இன்றைய போட்டியில்தான் நடந்திருக்கிறது.

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் இன்னிங்ஸில் குறைவான பந்துகளில் ஆட்டமிழந்த மூன்றாவது ஆட்டம் இது ஆகும். இங்கிலாந்து அணி 197 பந்துகளில் 172 ரன்கள் எடுத்துள்ளது. 1887ஆம் ஆண்டு சிட்னி நகரில் இங்கிலாந்து அணி 143 பந்துகளில் ஆட்டமிழந்ததுதான் மோசமான சாதனையாக இருந்து வருகிறது. 143 வருட ஆஷஸ் கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ்களில் தொடக்க வீரர் டக் அவுட் ஆகியிருக்கும் நிகழ்வு நடந்திருக்கிறது.

இன்றைய போட்டியில் பந்தானது மிகவும் துல்லியமாக ஸ்விங் ஆனது. தாறுமாறாக பந்து எகிறவும் செய்தது. அதனால் பேட்ஸ்மேன்களால் பந்துகளை கணிக்கவே முடியவில்லை. அதற்கு டிராவிஸ் ஹெட் விக்கெட் ஒரு சான்று. உட் வீசிய பந்து பவுன்ஸ் ஆகி மேலே எகிற ஹெட் திகைத்து நின்றார். ஆனால் பந்து அவரது பேட்டில் பட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.