2026 யு19 ஆசியக்கோப்பை இறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றியது. ஆர்யவீர் சேவாக் தொடரில் 361 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார். பாகிஸ்தான் ரசிகர்கள் 'சேவாக்' என கோஷமிட்டது அவருக்கு எதிர்பாராத அனுபவமாக இருந்தது.
2026 யு19 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனாக இருந்த பாகிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி. லீக் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியிருந்த நிலையில், 338 ரன்கள் இலக்காக இருந்தபோதும் கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் இந்தியா பெற்ற த்ரில் வெற்றியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்தசூழலில் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய வீரேந்தர் சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் 5 போட்டிகளில் ஒரு சதம், 3 அரைசதங்களுடன் 361 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். அவருக்கு கங்குலி, அஸ்வின் முதலிய முன்னாள் வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் இறுதிப்போட்டியில் வென்றதற்கு பிறகு தந்தை சேவாக்குடன் வீடியோ காலில் பேசிய ஆர்யவீர், அழுத்தமான நேரங்களில் ’சீதா ராம்’ என வேண்டிக்கொண்டதாக தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் ரசிகர்கள் தனக்கு ஆதரவாக சேவாக் சேவாக் என கோஷமிட்டது எதிர்பாராத தருணமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
வீரேந்தர் சேவாக் உடன் பேசியிருக்கும் ஆர்யவீர் சேவாக், "எப்படியாவது ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கையில் 'சீதா ராம், சீதா ராம், சீதா ராம்' என்று வேண்டிக்கொண்டே இருந்தேன். பிறகு அவர்கள் அடித்தார்கள்... அதன்பிறகு, கடைசி ஓவரில் எங்களுக்கு எட்டு ரன்கள் தேவைப்பட்டன... அவர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்து கொண்டிருந்தார்கள்... ஆனால் பவுண்டரி வரவில்லை. 'தயவுசெய்து ஒரு பவுண்டரியாவது விழட்டும், ஒரேயொரு பவுண்டரி, ஏதாவது ஒன்று...' என்று நான் வேண்டிக்கொண்டிருந்தேன்... பிறகு அது நடந்தது, எல்லோரும் பைத்தியம் பிடித்தது போல் ஆனார்கள்” என உணர்ச்சிபூர்வமான தருணத்தை விவரித்தார்.
மேலும் “இறுதிப்போட்டியில் எனது முழங்கையில் அடிப்பட்டபோது மைதானத்தில் இருந்த சுமார் 2 ஆயிரம் பாகிஸ்தான் ரசிகர்கள் நான் தொடர்ந்து பேட் செய்ய வேண்டும் என விரும்பி, சேவாக்.. சேவாக்.. என கோஷமிட்டனர்.. அவர்கள் எனக்கு ஆதரவளித்தனர். அது எதிர்ப்பார்க்காத வேடிக்கையான ஒரு அனுபவமாக இருந்தது” என்று பேசியுள்ளார்.