Indian Team / Andy Roberts
Indian Team / Andy Roberts Twitter
கிரிக்கெட்

"எந்த அணியையும் வென்றுவிடலாம் என்ற திமிரே இந்தியாவின் தோல்விக்கு காரணம்"- விண்டீஸ் ஜாம்பவான் காட்டம்

Rishan Vengai

டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது முதல் மோசமான பேட்டிங் செய்தது வரை, எவ்வளவு ரன்களை அடித்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையையே WTC இறுதிப்போட்டியில் இந்திய அணி செயல்பட்டது. போட்டி தொடங்குவதற்கு முன்பு, ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சுக்கும் இந்திய அணியின் டாப் ஆர்டருக்கும் இடையேயான போட்டி தான் வெற்றி யார் பக்கம் என்பதை முடிவு செய்யும் என்று ரிக்கி பாண்டிங் முதலிய ஜாம்பவான் கிரிக்கெட்டர்களால் கூறப்பட்டது.

Ind vs Aus / WTC Final

ஆனால், இறுதிப்போட்டியில் நடந்தது அப்படியே தலைகீழாக இருந்தது. டாப் ஆர்டர் பேட்டர்களான கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்கள் சோபிக்க தவறிவிட்டனர். டி20 அணுகுமுறையில் இருந்து அவர்களால் டெஸ்ட்டிற்கு தேவையான பேட்டிங்கிற்கு மாறமுடியவில்லை. மாறாக மோசமான ஷாட்களை விளையாடி விக்கெட்டை பறிகொடுத்து படுதோல்வியை சந்தித்தனர்.

இந்நிலையில். இந்திய அணிக்குள் ஆணவம் புகுந்துவிட்டதாக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பந்துவீச்சாளர் ஆண்டி ராபர்ட்ஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்.

”இந்திய அணிக்குள் ஆணவம் புகுந்துவிட்டது; மற்ற அணிகளை குறைத்து மதிப்பிடுகின்றனர்”

இந்திய அணியின் மோசமான செயல்பாடு குறித்து பேசியிருக்கும் ஆண்டி ராபர்ட்ஸ், “இந்திய அணிக்குள் எந்த அணியையும் வீழ்த்தி விடலாம் என்ற ஆணவம் ஊடுறுவியுள்ளது. அவர்கள் மற்ற உலக அணிகளை குறைத்து மதிப்பிட்டுள்ளனர். அவர்களின் முக்கியத்துவம் டெஸ்ட் வடிவமா? அல்லது குறுகிய ஓவர்கள் கொண்ட வடிவமா? என்ற இரண்டில் எது என்பதை இந்தியா முடிவு செய்யவேண்டும்.

டி20 கிரிக்கெட்டில் நீங்கள் எதையும் பெரிதாக செய்யத்தேவையில்லை, அது அதன் போக்கில் தானாக இயங்கும். ஆனால் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் ஆட்டம் ஏமாற்றம் அளித்தது. பேட்டிக்கிற்கும் பந்திற்கும் எந்த பெரிய கண்டஸ்ட்டும் இல்லாமல் போனது உண்மையில் வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

நல்ல வீரர்கள் இருந்தும் கோட்டைவிட்டனர்!

இந்திய அணியின் பேட்டிங் திறமை குறித்து பேசியிருக்கும் அவர், “இந்தியா தனது பேட்டிங் பலத்தை வெளிப்படுத்தும் என்று நான் எதிர்பார்த்தேன். அஜிங்க்யா ரஹானே கடுமையாகப் போராடினாலும் இறுதிப் போட்டியில் அவருடைய பிரகாசமான பேட்டிங்கைப் பார்க்கவில்லை. ஷுப்மான் கில் அதிரடியான ஷாட்களை ஆடும்போது நன்றாகத் தெரிகிறார். ஆனால் அவர் எளிதில் விக்கெட்டை பறிகொடுக்கும் வகையில் லெக் ஸ்டம்பில் நின்று விளையாடினார்.

Virat kohli

அவருடைய அந்த பொஷிசன் எளிதாக போல்டாகும் வகையிலும், எப்போது வேண்டுமானாலும் கேட்ச் கொடுக்கும் வகையில் இருந்தது. அவருக்கு நல்ல கைகள் உள்ளன, ஆனால் அவர் பந்துக்கு பின்னால் வர வேண்டும், லேட்டாக விளையாட வேண்டும். விராட் கோலி, முதல் இன்னிங்ஸில் மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் மோசமாக வெளியேறினார். இந்தியாவில் சில நல்ல வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் சொந்த மண்ணிற்கு வெளியே விளையாடும் போது அவர்களுடைய சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த தவறுகின்றனர்” என்று ராபர்ட்ஸ் கூறினார்.

அவர்கள் சரிந்துவிடுவார்கள் என்று எனக்கு தெரியும்!

வெற்றிபெறும் வாய்ப்பு இந்திய அணிக்கு இருந்ததா என்பது குறித்து பேசியிருக்கும் அவர், “நான் அப்படி எந்த நம்பிக்கையையும் கொண்டிருக்கவில்லை. அவர்கள் சரிந்துவிடுவார்கள் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் இரண்டு இன்னிங்ஸிலும் பேட்டிங் மோசமாக இருந்தது” என்று மிட்-டே இடம் ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.