ராகுல் டிராவிட், சேவாக் ஆகியோரின் மகன்கள் அன்வே டிராவிட், ஆர்யவீர் சேவாக் இணைந்து யு19 ஒருநாளில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தனர். மழையால் 20 ஓவராக குறைந்த போட்டியில், ஆர்யவீர் 26 பந்தில் 28 ரன்கள், அன்வே 18 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 38 ரன்கள் குவித்தார். இந்தியா 182 ரன்கள் சேர்த்து, ஆஸ்திரேலியாவை 175 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்றது.
ஒரு நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் டிரெஸ்ஸிங் அறையை ராகுல் டிராவிட் மற்றும் விரேந்தர் சேவாக் பகிர்ந்துகொண்ட நிலையில், தற்போது அவர்களுடைய மகன்களான அன்வே டிராவிட் மற்றும் ஆர்யவீர் சேவாக் இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பொதுவாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆட்டத்திற்கு பெயர் போனவர் இல்லை. 100 பந்துக்கு 2 ரன்னை அடிக்கக்கூடிய ஒரு மெதுவான ஆட்டத்திற்கே பெயர் போனவர். இந்தசூழலில் அவருடைய மகன் அன்வே டிராவிட் 211 ஸ்ட்ரைக்ரேட்டில் ஆஸ்திரேலியாவையே துவம்சம் செய்துள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா யு19 அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் தொடங்கிய நிலையில், ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
பின்னர் தொடங்கப்பட்ட போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 182 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரராக விளையாடிய ஆர்யவீர் சேவாக் 5 பவுண்டரிகளுடன் 26 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார். கடைசியாக வந்து அதிரடி காட்டிய டிராவிட் மகன் அன்வே 18 பந்தில் 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் குவித்து மிரட்டினார். சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய யஷ்பர்தன் சௌஹான் 34 பந்தில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உடன் 54 ரன்கள் அடித்தார்.
183 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 175 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.