இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. 3 போட்டிகள் முடிவுற்ற நிலையில், இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளது. இந்திய அணியில் இருக்கும் அனுபவமின்மை 3-0 என வெல்லவேண்டிய வாய்ப்பை 1-2 என இழக்க காரணமாக அமைந்தது.
இந்த சூழலில் 4வது டெஸ்ட் போட்டியில் வென்று 2-2 என தொடரை சமன்செய்யும் முனைப்பில் இந்தியா களம்காண உள்ளது.
இந்நிலையில் 4வது போட்டிக்கு முன்னதாக காயம் காரணமாக ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் விலகியுள்ளனர். புதிய வீரராக அணிக்குள் அன்ஷுல் கம்போஜ் இணைக்கப்பட்டுள்ளார்.
இன்று பிசிசிஐ வெளியிட்டிருக்கும் அப்டேட்டின் படி, இந்திய அணியின் ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி காயம் காரணமாக தொடரிலிருந்தே வெளியேறுவதாகவும், வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் காயம் காரணமாக 4வது டெஸ்ட்டிலிருந்து விலகுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேகப்பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் அணியுடன் இணைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியுடன் இணைந்த அன்ஷுல் கம்போஜ் தன்னுடைய கிரிக்கெட் பயணம் குறித்து பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அன்ஷுல், “நான் 12 வயதிலேயே தொழில்முறை கிரிக்கெட்டை விளையாட ஆரம்பித்துவிட்டேன். என்னுடைய வளர்ச்சியில் என் தந்தையின் ஆதரவு அதிகம். ஒவ்வொரு நாளும் என் வீட்டிலிருந்து 2 மணி நேரம் பயணம் செய்துதான் கிரிக்கெட் விளையாடுவேன். க்ளென் மெக்ராத்தின் நிலையான பந்துவீச்சும், விக்கெட் எடுக்கும் திறனும் தான் என்னை அதிகம் கவர்ந்தது. அவர் தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன்” என தெரிவித்துள்ளார்.
24 வயதேயான அன்ஷுல் கம்போஜ் 24 முதல் தர போட்டிகளில் விளையாடி 22.88 சராசரியுடன் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மெக்ராத்தை போலவே தன்னுடைய நிலையான பந்துவீச்சுக்கு பெயர்போன அன்ஷுல் இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்டில் அறிமுகமாகும் வாய்ப்பை பெறுவார் என எதிர்ப்பாக்கப்படுகிறது.