anil kumble, abhishek sharma x page
கிரிக்கெட்

”அணி ஜெயிச்சதால தப்பிச்சார்; இல்லனா” - அபிஷேக் சர்மாவைச் சாடும் முன்னாள் ஜாம்பவான்கள்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் நிலைமை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

Prakash J

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தொடர்ந்து சோபித்து வரும் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவும் அவரை விமர்சித்துள்ளார்.

ஒருவழியாக டி20 உலகக்கோப்பை அரையிறுதிச் சுற்றுக்குள் இந்திய அணி நுழைந்துவிட்டது. எனினும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் நிலைமை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. லீக்கில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் டக் அவுட் முறையில் வீழ்ந்த அவர், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே அவர் 55 ரன்கள் குவித்தார். நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியிலும் அவர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் சர்மா, 13.33 என்ற மோசமான 131.14 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடனும் வெறும் 80 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதையடுத்து மீண்டும் அவர்மீது விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.

Abhishek Sharma

இதுகுறித்து பேசிய முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே, ”அபிஷேக் சர்மா மனதில் இப்போது குழப்பம் நிறைந்துள்ளது. தன்னிடம் போதுமான தன்னம்பிக்கை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்திய அணி வெற்றிபெற்று வருவதால், மற்ற பேட்டர்கள் தனது அழுத்தத்தைக் குறைப்பார்கள் என்று அவர் நினைக்கிறார். தற்போது அணி அரையிறுதிக்குச் சென்றுள்ளதால், இனி நான் எனது பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று அவர் எண்ணத் தொடங்குவார். ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி மிகவும் சவாலானதாக இருக்கும். அவர்களிடம் வில் ஜாக்ஸ் போன்ற பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் பவர் பிளேயில் வில் ஜாக்ஸை பந்துவீச வைப்பார். இது அபிஷேக் சர்மாவுக்குக் கூடுதல் நெருக்கடியைக் கொடுக்கும்" என்றார்.

அதேபோல் தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஃபாப் டூ பிளெசிஸ், அணியின் வெற்றியே அபிஷேக் சர்மாவைக் காப்பாற்றியுள்ளதாகத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர், "இந்திய அணி வெற்றிபெற்று வருவது அவருக்கு ஒரு நல்ல விஷயமாகும். ஒரு அணி வெற்றி பெறும்போது ஃபார்மில் இல்லாத வீரரின் குறைகள் அணியால் மறைக்கப்பட்டுவிடும். ஆனால் அணி தோற்றால், அந்தப் பழி ஃபார்மில் இல்லாத வீரர் மீதுதான் விழும். ஒருவேளை கொல்கத்தாவில் இந்திய அணி தோல்வியடைந்திருந்தால், அனைவரின் விரல்களும் அபிஷேக் சர்மாவை நோக்கியே நீண்டிருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.