Ambati Rayudu
Ambati Rayudu Twitter
கிரிக்கெட்

”விஜய் சங்கர் மீது கோபமில்லை; என்னை அவர்கள்தான் மன ரீதியாக துன்புறுத்தினர்” - மனம் திறந்த ராயுடு!

Rishan Vengai

5ஆவது முறை ஐபிஎல் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த அம்பத்தி ராயுடு, 2023 ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பிறகு அனைத்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்தார். ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையில் 6 கோப்பைகளை வைத்திருக்கும் இரண்டு வீரர்களில் ஒருவராக இருக்கும் அம்பத்தி ராயுடுவால், சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு உலகக்கோப்பையில் கூட பங்குபெறமுடியாமல் போய்விட்டது.

IND vs NZ - 2019 Semi Final

2019 உலகக்கோப்பையில் 4ஆவது இடத்திற்கான வீரராக பார்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு, அதற்கு முந்தைய போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்டுவந்தார். அவர் சிறப்பான விளையாடிய போட்டிகளில் இந்திய கேப்டனாக இருந்த விராட் கோலி, ராயுடு தான் உலகக்கோப்பையில் 4ஆவது இடத்தில் விளையாட போவதாக தெரிவித்திருந்தார். ஆனால் என்ன காரணத்திற்காகவோ அம்பத்தி ராயுடு இல்லாமல் உலகக்கோப்பைக்கு சென்ற இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது. அப்போது அம்பத்தி ராயுடு எடுக்கப்படாமல் சென்றது பெரிய விவாதத்திற்குள்ளானது. இந்நிலையில் அச்சம்பவம் குறித்து உணர்வுபூர்வமாக பேசியுள்ளார் அம்பத்தி ராயுடு.

என் வாழ்க்கை ஒரு சுழற்சியை போல சில நபர்களுக்குள்ளாகவே அடங்கிவிட்டது!

இந்திய தேர்வுக்குழுவில் இருந்த ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நபருக்கும் தனக்கும் இருந்த பிரச்சனைகள் குறித்து உணர்வுபூர்வமாக பேசியுள்ள அம்பத்தி ராயுடு, விஜய் ஷங்கர் மீது எந்த கோபமும் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Ambati Rayudu

2019 உலகக்கோப்பையில் எடுக்கப்படாதது குறித்து பேசியிருக்கும் ராயுடு, “சில வீரர்களை தேர்வு செய்ய ஒருவருக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரு தனி நபரின் முடிவை வைத்துமட்டுமே அணி தேர்வு நடத்தப்படுவதில்லை. வீரர்கள் தேர்வு செய்யப்படாததற்கு வேறு பல காரணங்களும் உள்ளன. அப்போதைய தேர்வுக்குழு நிர்வாகத்தில் சில நபர்கள் இருந்தனர். ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் இருந்தார். நான் கிரிக்கெட்டில் வளர்ந்துவந்த நேரங்களில் எங்கள் இருவருக்குள்ளும் ஒத்துப்போகவில்லை. அவரிடம் எனக்குப் பிடிக்காத சிறு விஷயங்களும், என்னிடம் அவருக்கு பிடிக்காத சில விசயங்களும் இருந்தன. இந்த போக்கானது ஒரு காலத்தில் மோசமாகவே கட்டமைக்கப்பட்டிருந்தது. எனது முழு வாழ்க்கையிலும் ஒரு சுழற்சியாக நான் கையாண்ட அதே நபர்களைத்தான் மீண்டும் மீண்டும் எதிர்கொண்டேன்” என்று அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.

இந்த பிரச்சனை உள்நாட்டு போட்டியிலேயே தொடர்ந்தது ; வேறு ஒருவருக்காக என்னை ஓரங்கட்டினர்

ராயுடுவின் பிரச்சனைகள் உள்நாட்டு கிரிக்கெட்டில் 2004-05 சீசனில் தொடங்கியதாக குறிப்பிட்டார். முந்தைய சீசனில் 45.55 என்ற அற்புதமான சராசரியுடன் தொடர்ந்த ராயுடு, கென்யாவில் இந்தியா A அணிக்காக 152 சராசரியுடன் விளையாடி சிறந்த ரன்களுடன் இந்திய அணிக்குள் நுழைந்தார். எல்லா விசயங்களும் அவருக்கு அப்போது பிரகாசமாகவே இருந்தன. ஆனால் திடீரென அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது.

உள்நாட்டு போட்டிகளில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து பேசியிருக்கும் அவர், “2005-ல் ஆந்திராவுக்காக விளையாடச் சென்றேன். அந்த அணிக்கு எம்எஸ்கே பிரசாத் கேப்டனாக இருந்தார். அவரால் எனக்கு அங்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால் அவருடைய சில முறைகள் எனக்குப் பிடிக்கவில்லை. அவர் விளையாட்டைப் பார்த்த விதமும், என்னுடைய அந்த வயதில் அவர் செய்த சில செயல்களும் எனக்குப் பிடிக்காததால் அங்கிருந்து ஹைதராபாத் திரும்பினேன்.

அங்கும் ஹைதராபாத் செயலாளர் ஷிவ்லால் யாதவுடன் பல பிரச்சனைகள் இருந்தன. அவரது சகோதரர் பயிற்சியாளராகவும், அவரது மகன் ஹைதராபாத் அணியின் கேப்டனாகவும் இருந்தார். அப்போது அங்கு விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. அந்த இடத்திலிருந்தே ஒருவிதமான அரசியலுக்குள் நான் சிக்கிக்கொண்டேன். சிறப்பாக விளையாடிய என்னை செயலாளரின் மகனுக்காக நீக்க முயன்றனர். அந்த நடத்தையை வேறு யாரிடமும் சொல்லமுடியாதவாறு என்னை 4 வருடங்கள் துன்புறுத்தினர்” என்று கூறியுள்ளார்.

2019 உலகக்கோப்பைக்கு தயாராக இருங்கள் என்று கூறினர்.. ஆனால் விஜய் சங்கரை எடுத்துச்சென்றனர்!

2018ஆம் ஆண்டிலேயே 2019 உலகக்கோப்பைக்கு தயாராக இருங்கள் என்று தெரிவித்ததாகவும், ஆனால் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யாதது பெரிய ஏமாற்றமளித்ததாகவும் ராயுடு கூறியுள்ளார். அதுகுறித்து பேசியிருக்கும் அவர், “அன்று நான் விமானத்தில் இருந்தேன். ஐபிஎல் போட்டியின் போது நாங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தோம். விமானத்தில் இருந்து இறங்கி போனை ஆன் செய்தவுடன் பல செய்திகள் வந்தது. நான் காத்திருப்பில் இருந்தேன், பின்னர் நான் அணியில் இல்லை என்பதை உணர்ந்தேன். அந்த நேரத்தில் அது மிகவும் ஏமாற்றமாக இருந்தது. நான் இந்தியாவுக்காக விளையாடி உலகக் கோப்பையில் பங்கேற்க விரும்பினேன்” என்று எமோசனலாக பேசியுள்ளார்.

மேலும், “ரஹானே போன்ற ஒருவரையோ அல்லது அனுபவம் வாய்ந்த ஒரு மூத்த வீரரையோ அவர்கள் தேர்ந்தெடுத்தார்களா என்று பாருங்கள். இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும், என்னுடைய விருப்பமும். அவர்களுக்கு மட்டும் தெரிந்த ஏதோ ஒரு காரணத்திற்காக என்னை தேர்வு செய்யவில்லை. ஆனால் எனக்குப் பதிலாக ஒரு அனுபமிக்க ஒரு வீரரையாவது நியமிக்கும்போது தான் அது அணிக்கும் உதவியாக இருக்கும். அங்கேதான் எனக்கு கோபம் வந்தது. என்னுடைய அந்த கோபம் விஜய் சங்கரைப் மீதானது அல்ல. அவர் அப்போது தான் அவருடைய தொடக்க கால கிரிக்கெட்டை விளையாடிக் கொண்டிருந்தார். அவரால் என்ன செய்திருக்க முடியும்? என்று யோசிக்க வேண்டும். என்ன நினைத்தாலும் அவர்களின் முடிவை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்னை நினைத்தார்கள் உலகக் கோப்பையில் விளையாடுகிறார்களா அல்லது சாதாரண லீக் ஆட்டத்தில் விளையாடுகிறார்களா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று ராயுடு கூறியுள்ளார்.