இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜிங்கியா ரஹானே. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இவர், தனது கிரிக்கெட் பயணம் குறித்துப் பேசியுள்ளார். அதில், இந்திய அணியில் இடம்பிடித்தும் இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் பாட்டில் சுமந்தது குறித்து உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்த அஜிங்கியா ரஹானே தனது கிரிக்கெட் பயணம் கிரிக்கெட் குறித்து கூறியுள்ளார். அதில், “2011ல் நான் முதன்முதலில் இந்திய அணிக்குள் நுழைந்தபோது, டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக எனக்கு 2 ஆண்டுகள் ஆனது. அந்த 2 ஆண்டுகளில் சுமார் 20 போட்டிகளில் நான் 12வது வீரராக மட்டுமே பெஞ்சில் அமர்ந்திருந்தேன். அது, எனது வாழ்க்கையில் மிகவும் சவாலான காலகட்டம். அப்போது என்னிடம் இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று, மற்றவர்களின் அனுதாபத்தைப் பெறுவது அல்லது என்னை நானே மேம்படுத்திக் கொள்வது. 12ஆவது வீரராக இருப்பதிலோ, சக வீரர்களுக்கு தண்ணீர் கொண்டுவந்து கொடுப்பதிலோ, அவர்களுக்கு உதவுவதிலோ எந்த தவறும் இல்லை.
நான் அதை நேர்மறையாக எடுத்துக் கொண்டேன். பெஞ்சில் அமர்ந்து ஆட்டத்தைக் கவனித்தது எனது மனநிலையை வளர்க்க உதவியது. இதன் காரணமாகவே என்னால் நீண்டகாலம் விளையாட முடிந்தது. மும்பை உள்ளூர் ரயிலில் பயணம் செய்யும்போதே எனக்குள் பொறுமை வளரத் தொடங்கிவிட்டது. உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து ரன் சேர்க்கும்போது, இந்திய அணியில் இடம் கிடைக்காதா என்ற ஏக்கம் இருந்தது. ஆனால் மூத்த வீரர்களுடன் பேசிய பிறகு, நமக்கான நேரம் வரும்போது எல்லாம் நடக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். நீண்டகாலம் விளையாட பொறுமை மிகவும் அவசியம்" எனத் தெரிவித்துள்ளார்.