2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடினமாக சண்டையிட்டு வருகிறது தென்னாப்பிரிக்கா அணி.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வெப்ஸ்டர் இருவரின் அரைசதத்தின் உதவியால் 212 ரன்கள் சேர்த்தது. அபாரமாக பந்துவீசிய ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதற்குபிறகு முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸின் மிரட்டலான பந்துவீச்சால் 138 ரன்களுக்கே சுருண்டது. 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் பாட் கம்மின்ஸ்.
முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா, இரண்டாவது இன்னிங்ஸில் 73 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் அதற்கு பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 43 ரன்களும், மிட்செல் ஸ்டார்க் 58 ரன்களும் அடிக்க 207 ரன்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா. இதன்மூலம் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற 282 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் ஐசிசி ஃபைனலில் மிகப்பெரிய சேஸிங்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா, 9 ரன்னில் தொடக்க வீரர் ரிக்கல்டன் விக்கெட்டை இழந்தது. ஆனால் அழுத்தமான நேரத்தில் கைக்கோர்த்த மார்க்ரம் மற்றும் முல்டர் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர். சிறப்பாக விளையாடிய முல்டரை ஸ்டார்க் வெளியேற்ற மீண்டும் அழுத்தம் தொற்றிக்கொண்டது.
ஆனால் இம்முறை களத்தில் செட்டாகிவிட்ட எய்டன் மார்க்ரம் பவுண்டரிகளாக விரட்டி ரன்களை எடுத்துவர, கேப்டன் டெம்பா பவுமா தன்னுடைய சிறந்த ஃபார்மை டிஃபன்ஸில் வெளிப்படுத்தினார். இரண்டு வீரர்களும் அரைசதமடித்து அசத்த, பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தது. இருவரும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் விளையாடிய நிலையில், 11 பவுண்டரிகளை விரட்டிய எய்டன் மார்க்ரம் சதமடித்து அசத்தினார்.
இதன் மூலம் ஐசிசி ஃபைனலில் சதமடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரராக சாதனை படைத்து அசத்தினார் எய்டன் மார்க்ரம். தென்னாப்பிரிக்கா 27 வருடத்திற்கு பிறகு முதல் ஐசிசி கோப்பையை வெல்ல இன்னும் 69 ரன்களே மீதமுள்ளன.