Mohammed Siraj
Mohammed Siraj Twitter
கிரிக்கெட்

"என் பந்துவீச்சில் ஆக்ரோஷம் மிக முக்கியமானது; அதுதான் என் பலம்” - விமர்சனங்களுக்கு சிராஜ் பதில்!

Rishan Vengai

பந்தைவீசுவது 'சிராஜ்' என்றாலே களத்தில் அனல் பறக்கும் என்று எண்ணும் அளவு தன்னுடைய பந்துவீச்சில் பெரிய முன்னேற்றத்தை கண்டுவருகிறார், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ். களத்தில் பந்துவீசும்போது எதிரணி பேட்டர்களுடன் முறைப்பது, அடிக்கடி சூடான கருத்து பரிமாற்றங்களில் ஈடுபடுவது என ஆடுகளத்தில் எப்போதும் பிசியாகவே இருக்கும் ஒரு இந்திய பவுலர் என்றால் அது முகமது சிராஜ் தான். புதிய பந்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அவருடைய திறமை, தற்போது அவரை இந்தியாவிற்கு நம்பகமான பந்துவீச்சாளராக மாற்றியுள்ளது.

ஆரம்பத்தில் ஐபிஎல் போட்டிகளில் வெளிப்பட்ட தன்னுடைய மோசமான பந்துவீச்சால், ‘இவரெல்லாம் ஒரு பவுலர்னு ஏன் பா அணியில் எடுக்கிறீர்கள்’ என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்டார். ஆனால், அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில், டெஸ்ட் வடிவத்தில் அவருடைய அற்புதமான பந்துவீச்சு மற்றும் சிறப்பான சீம் பொசிசன் அனைத்தும் யாரும் நம்பமுடியாத முன்னேற்றத்தை கண்டிருந்தது. ஒருமுறை தான் வாய்ப்பு வழங்கப்பட்டது, அதை கற்பூரமாக பற்றிக்கொண்ட முகமது சிராஜ் டெஸ்ட் வடிவத்தில் பும்ரா இல்லாததை இந்திய அணிக்கு ஒருகுறையாகவே தெரியாமல் பார்த்துக்கொண்டுள்ளார்.

ஒரு காலத்தில் சிராஜை கலாய்த்து தள்ளிய இந்திய ரசிகர்கள், தற்போதெல்லாம் “விராட் கோலி இருக்காருன்ற தைரியத்துல நீ எல்லா பேட்டர்கிட்டயும் முறைச்சிகிட்டு இருக்க” என்று அவருடைய ஆக்ரோசத்தை ரசித்து வருகின்றனர்.

ஸ்மித்தை நோக்கி பந்தை எறிந்த முகமது சிராஜ் - கண்டனம் தெரிவித்த கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது ஸ்டீவ் ஸ்மித்தை நோக்கி முகமது சிராஜ் பந்தை தூக்கி எறிந்து அதிருப்தியை வெளிப்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 86-வது ஓவரில் 3வது பந்தை வீசுவதற்கு ஓடி வந்த முகமது சிராஜ், அந்த நேரத்தில் பந்தை எதிர்கொள்வதற்கு தயாராக இருந்த ஸ்டீவ் ஸ்மித் கடைசி நொடியில் ஸ்பைடர் கேமரா நகர்ந்ததால் ஸ்டம்பை விட்டு விலகி பவுலிங்கை நிறுத்தும்படி சைகை செய்தார். ஆனால் ஓடிவந்த முகமது சிராஜ் பேட்ஸ்மேன் விலகியது தெரிந்தும்கூட பந்தை அவரை நோக்கி தூக்கி எறிந்து அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

Steve Smith vs Mohammed Siraj

இருப்பினும் கேமரா நகர்ந்ததால்தான் நானும் நகர்ந்தேன் என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார். இந்நிகழ்விற்கு பிறகு முகமது சிராஜ் ஆக்ரோசமாக நடந்து கொண்டது தவறு என்று இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

எவ்வளவு ஆக்ரோசமாக வீசுகிறேனோ, அவ்வளவு வெற்றியை பெறுவேன்.. அது தான் என் பலம்! - சிராஜ்

தன்னுடைய ஆக்ரோசமான அணுகுமுறை விமர்சனத்திற்குள்ளான நிலையில், தற்போது அதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார் முகமது சிராஜ். தனது பந்துவீச்சில் ஆக்ரோஷம் எவ்வளவு முக்கியத்துவம் என்பதையும், அது தனது வெற்றிக்கு எவ்வாறு பங்களிக்கிறது என்பதையும் வலியுறுத்தியுள்ள அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆக்ரோசம் ஒரு முக்கியமான விசயம் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Mohammed Siraj

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “எனது பந்துவீச்சில் ஆக்ரோசம் மிகவும் முக்கியமானது. டெஸ்ட் கிரிக்கெட் என்பதே ஆக்ரோஷமானது தான் என நினைக்கிறேன். என்னுடைய வெளிப்பாடு எளிமையான பந்துகளை வீசிவிட்டு எதுவும் சொல்லாமல் வெளியேறுவது அல்ல. சில பந்து வீச்சாளர்கள் வேண்டுமென்றால் ஆக்ரோசத்தால் அங்கும் இங்கும் பந்து வீசுவது போல் இருக்கலாம். ஆனால் எனது பந்துவீச்சு மிகவும் துல்லியமானது. நான் எவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கிறேனோ, அவ்வளவு வெற்றியைப் பெறுவேன்” என்று ஐசிசி உடனான வீடியோவில் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது தான் மரியாதை என்று என் தந்தை கூறுவார்!

டெஸ்ட் கிரிக்கெட் பற்றி விவாதித்தோடு மட்டுமல்லாமல் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப நாட்கள் குறித்தும் வெளிப்படுத்தினார் சிராஜ். தற்போது சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்துவரும் அவர், நிறைய டென்னிஸ்-பால் கிரிக்கெட்டை தான் விளையாடியதாக குறிப்பிட்டார். இந்தியாவிற்காக விளையாடுவேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை என்று தெரிவித்த அவர், தன்னுடைய தந்தையை நினைத்து பெருமை படுவதாக உணர்ச்சியோடு கூறினார்.

Mohammed Siraj

சிராஜ் பேசுகையில், “நான் நிறைய டென்னிஸ்-பால் கிரிக்கெட் தான் விளையாடினேன். என்னால் ஒரு இந்திய வீரராக வரமுடியும் என்று அப்போது நினைத்து கூட பார்த்ததில்லை. ஆரம்பகால போட்டிகளில் எனது 100 சதவீத உழைப்பை கொடுத்து விளையாடுவேன். தொடர்ந்து லீக்கில் விளையாடத் தொடங்கியபோது தான் முதன்முதலில் ​​லெதர் பந்தை தொட்டேன். அதுதான் எனக்கு முதல் முறை, அப்போது ஸ்விங்-இன்ஸ்விங் பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அறிமுக போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகளை என்னால் வீழ்த்த முடிந்தது. அப்படியே விளையாட விளையாட மெதுவாக என் நம்பிக்கை வளர்ந்தது. ஆனாலும் இந்தியாவிற்காக விளையாடுவேன் என்று என் மனதில் தோன்றவேயில்லை. இருப்பினும் தொடர்ந்து கிரிக்கெட்டை மட்டும் ரசித்துக்கொண்டே இருந்தேன்” என்று கூறியுள்ளார்.

Mohammed Siraj

மேலும் 2020-ல் தனிப்பட்ட துன்பங்களை எதிர்கொண்ட போதிலும் மனம் தளராமல் இருந்த முகமது சிராஜ், கிரிக்கெட்டில் மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்தார். தன்னுடைய தந்தையை இழந்து, தனது டெஸ்ட் அறிமுகம் குறித்த நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டாலும், சிராஜ் விடாமுயற்சியுடன் இருந்தார். டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதில் பெருமிதம் கொண்ட அவர், “என் தந்தை தற்போது இருந்திருந்தால் என்னை நினைத்து பெருமைப்பட்டிருப்பார். ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது தான் மரியாதை மற்றும் பெருமை என்று அவர் கூறுவார்" என்று சிராஜ் கூறினார்.