ரோகித் - விராட் எதிர்காலம் குறித்து பேசிய அஜித் அகர்கர் web
கிரிக்கெட்

’முடிவுக்கு வரும் ரோகித்-கோலி சகாப்தம்..’ அகர்கர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

2027 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் இருந்த நிலையில், இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rishan Vengai

2027 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் இருந்த நிலையில், இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி, ரோகித் சர்மா 2027 உலகக்கோப்பையில் விளையாடுவார்களா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடவிருக்கிறது.

அக்டோபர் 19 முதல் நவம்பர் 08 வரை போட்டிகள் நடைபெறவிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோகித் சர்மா

இதில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டு, கேப்டன் பதிவியிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகர்கர் சொன்ன அதிர்ச்சி தகவல்..

இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா கேப்டன்சியிலிருந்து நீக்கம், ஜடேஜா இடம்பெறாதது குறித்து பேசியிருக்கும் தேர்வுக்குழு தலைவர் அஜித் குமார், ரோகித் மற்றும் கோலியின் எதிர்காலம் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

கேப்டன்சி மாற்றம் குறித்து பேசிய அகர்கர், “ரோகித் சர்மாவிடம் கேப்டன்சி மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் 2027 உலகக்கோப்பையில் விளையாட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இன்னும் உறுதியளிக்கவில்லை. 3 வடிவங்களுக்கும் வெவ்வேறு கேப்டன்களை வைத்திருப்பதும் நடைமுறைக்கு சாத்தியமற்றது. ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை குறைவாகவே விளையாடுவதால், இப்போதே கில்லை கேப்டனாக நியமித்தால் தான் 2027 உலகக்கோப்பைக்கு தயாராக முடியும்” என தெரிவித்தார்.

மேலும் இருவரின் எதிர்காலம் குறித்து பேசிய அவர், “அவர்கள் பல ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட்டில் ரன்களை குவித்து வருகின்றனர். இன்னும் இந்திய அணிக்குள் அவர்களே தலைவர்களாக உள்ளனர். தற்போது தேர்வுசெய்யப்பட்டிருக்கும் அணி ஆஸ்திரேலியாவுக்காக மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது, நீங்கள் அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. அவர்கள் எந்த தனிப்பட்ட வேலையிலும் இல்லாதபோது உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்” என்று தெரிவித்தார்.

ஜடேஜ குறித்து பேசுகையில், ‘ஜடேஜா இன்னும் ஒருநாள் அணிக்காக தேர்வுப்பட்டியலில் இருக்கிறார்’ என்று தெரிவித்தார்.