Shahid Afridi
Shahid Afridi Twitter
கிரிக்கெட்

“எங்கள் பஸ் மீது பெங்களூரில் கற்கள் வீசப்பட்டன; இந்தியாவில் பாக். விளையாட வேண்டுமா?”-ஷாகித் அஃப்ரிடி

Rishan Vengai

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு சென்று விளையாட வேண்டுமா? வேண்டாமா? என்ற குழப்பம் மட்டும் இன்னும் முடிந்தபாடில்லை. பாகிஸ்தானின் தரப்பிலிருந்து பொதுவான மைதானம் தான் வேண்டும் என்றும், பின்னர் குறிப்பிட்ட மைதானங்களில் தான் பாகிஸ்தான் போட்டிகள் நடக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் ஐசிசி 2023 உலகக்கோப்பைக்கான அட்டவணையை வெளியிட்டது.

Ind vs Pak

இந்நிலையில், இன்னும் பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு சென்று விளையாட அந்நாட்டு அரசாங்கத்திடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. ஏனெனில், அந்நாட்டின் பிரதமர் உத்தரவின் பெயரில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இந்தியாவிற்கு சென்று விளையாட வேண்டுமா வேண்டாமா என்ற முடிவை அந்த குழு முடிவு செய்யும். இந்த சூழலில் தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, பாகிஸ்தான் அணி சென்று விளையாட அதிக அழுத்தம் இருந்தாலும், சென்று விளையாடி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

பெங்களூரில் பாகிஸ்தான் அணியின் பேருந்து மீது கற்கள் வீசப்பட்டன!

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷாஹித் அஃப்ரிடியிடம் பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு சென்று விளையாட வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், முன்பு இந்தியாவிற்கு சென்று விளையாடிய நாட்களைப் பற்றி பேசினார். போட்டியின் போது இந்திய பார்வையாளர்கள் எப்படி பாகிஸ்தான் மீது அழுத்தத்தை உருவாக்கினார்கள் என்பதை பற்றியும் தெரிவித்தார்.

Shahid Afridi

அப்போது பேசிய அவர், “இந்தியாவிற்கு சுற்றுப்பயணங்கள் செய்வது என்றாலே எங்கள் வாழ்க்கையில் அதிக அழுத்தம் நிறைந்த தருணமாகத்தான் இருந்துள்ளது. நாங்கள் அங்கு சென்று விளையாடிய போது பவுண்டரி அடித்தால் கூட எங்களுக்கு உற்சாகப்படுத்த யாரும் இருந்ததில்லை. ஒருமுறை பெங்களூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் வென்றுவிட்டு ஹோட்டலுக்குப் புறப்பட்டபோது, எங்கள் ​​அணியின் பேருந்து மீது கற்கள் வீசப்பட்டன. நிச்சயமாக அங்கு சென்று விளையாடும் போது அழுத்தம் இருக்கிறது தான், இல்லாமல் இல்லை. ஆனால் அனைத்தையும் தாண்டி அங்கு சென்று விளையாடுவது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று அவர் சமீபத்திய நிகழ்வில் கூறினார்.

மேலும், “பாகிஸ்தான் இந்தியாவுக்கு செல்லக்கூடாது என்று மக்கள் சொல்கிறார்கள். நான் அதை முற்றிலும் எதிர்க்கிறேன், நாங்கள் அங்கு சென்று போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று அஃப்ரிடி மேலும் கூறினார். அப்ரிடியின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் இந்திய ரசிகர்கள், 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை அணியின் மீது நடந்த தாக்குதலை குறிப்பிட்டு பதிவு செய்து வருகின்றனர்.