2025 ஆசியக்கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 172 ரன்கள் இலக்கை எளிதாக அடைந்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. 74 ரன்கள் விளாசிய அபிஷேக் சர்மா மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் பந்து ஓவரில் 90 ரன்களை கடத்திருந்தபோது, 200 ரன்களை எட்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால் தொடக்க வீரர் ஃபகார் ஜமானுக்கு கொடுக்கப்பட்ட அவுட் பாகிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்தது.
பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது மூன்றாவது ஓவரில் ஃபகார் ஜமானின் சர்ச்சைக்குரிய அவுட் நடந்தது. ஒன்பது பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் அடித்த ஃபகார் ஜமான், ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்சாகினார். ஆனால் ரீப்ளேவில் பந்து சஞ்சு சாம்சனின் கையுறைகளை அடைவதற்கு சற்று முன்பு பவுன்ஸ் ஆனதுபோல் தெரிந்தது.
முடிவு மூன்றாவது நடுவருக்கு சென்றபோது சில கோணங்களை மட்டுமே சரிபார்த்த நடுவர் இந்தியாவிற்கு சாதகமாக அவுட் கொடுத்தார். ஆனால் அதை எதிர்ப்பார்க்காத பேட்ஸ்மேன் ஃபகார் ஜமான் விரக்தியுடன் வெளியேறினார்.
இந்த சூழலில் தற்போது ஃபகார் ஜமான் சர்ச்சைக்குரிய அவுட் குறித்து பேசியிருக்கும் ஷாஹித் அப்ரிடி, “மூன்றாவது நடுவர் ஐபிஎல்லில் நடுவராக இருக்கலாம்.. தொடர்ந்து அங்கு நடுவராக இருக்க வேண்டும் என்பதால் முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்” என விமர்சித்துள்ளார்.
அதேபோல முன்னாள் வீரர் முகமது யூசுப் கூறும்போது, “அவர்கள் இன்னும் பல கோணங்களைக் சரிபார்த்திருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை, ஃபகார் மூன்று பவுண்டரிகளை அடித்தார் மற்றும் முதல் ஓவரில் பும்ராவை எளிதாகக் கையாண்டார். அவரது விக்கெட் இந்தியாவுக்கு முக்கியமானதாக இருந்தது" என்று பேசினார்.
மேலும் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் பேசுகையில், “ஃபகார் உண்மையில் ஆட்டமிழக்கவில்லை. 26 கேமராக்கள் இருந்தபோது, மூன்றாவது நடுவர் ஏன் இரண்டு கோணங்களை மட்டுமே சரிபார்த்தார்? ஃபக்கர் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால், போட்டியே மாறியிருக்கும்" என்று கூறினார்.