யு19 உலகக்கோப்பை இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதல் cricinfo
கிரிக்கெட்

செமி ஃபைனல்| 2 வீரர்கள் சதம்.. 310 ரன்கள் குவிப்பு.. இந்தியாவிற்கு ஆப்கானிஸ்தான் சவால்!

2026 யு19 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு எதிராக 310 ரன்கள் குவித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

Rishan Vengai

U19 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 310 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு சவால் விடுத்துள்ளது. பைசல் ஷினோசாடா மற்றும் உசைருல்லா நியாசி இருவரும் சதமடித்து அசத்தியுள்ளனர். இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டம் காட்டி 68 ரன்கள் குவித்துள்ளார். இந்தியா 163 ரன்கள் அடித்து 1 விக்கெட் இழந்துள்ளது.

ஜிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் U19 உலகக் கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுப்போட்டிகளில் 16 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதிபெற்றன.

இரண்டு பிரிவுகளாக சூப்பர் 6 போட்டிகள் நடைபெற்ற நிலையில், சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இந்தியா முதலிய 4 U19 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

u19 india team

இதில், நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், ஆஸ்திரேலியாவை 27 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

இந்நிலையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இரண்டாவது அரையிறுதிப்போட்டி நடந்துவருகிறது.

310 ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான்..

பரபரப்பாக நடைபெற்றுவரும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 310 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக பேட்டிங் செய்த பைசல் ஷினோசாடா 110 ரன்களும், உசைருல்லா நியாசி 101 ரன்களும் அடித்து அசத்தினர்.

பைசல் ஷினோசாடா

ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த சவாலான இலக்கை நோக்கி விளையாடிவரும் இந்திய அணியில், தொடக்கவீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி தன்னுடைய அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 33 பந்தில் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உட்பட 68 ரன்கள் குவித்து வெளியேறினார்.

இந்தியா யு19 அணி

தொடர்ந்து அதிரடியாக விளையாடிவரும் ஆரோம் ஜியார்ஜ் மற்றும் ஆயுஷ் மாத்ரே இருவரும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் விளையாடிவருகின்றனர். இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 20 ஓவரில் 163 ரன்கள் அடித்து விளையாடிவருகிறது.