mujeeb ur rahman
mujeeb ur rahman Twitter
கிரிக்கெட்

AFG vs ENG | வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்! என்ன சொல்கிறார் ஆட்டநாயகன் முஜீப் உர் ரஹ்மன்?

Viyan

போட்டி 13: ஆப்கானிஸ்தான் vs இங்கிலாந்து

முடிவு: 69 ரன்களில் ஆப்கானிஸ்தான் வெற்றி (ஆப்கானிஸ்தான் - 284 ஆல் அவுட், 49.5 ஓவர்கள்; இங்கிலாந்து - 215 ஆல் அவுட், 40.3 ஓவர்கள்)

ஆட்ட நாயகன்: முஜீப் உர் ரஹ்மன் (ஆப்கானிஸ்தான்)

பேட்டிங்: 16 பந்துகளில் 28 ரன்கள் (3 ஃபோர்கள், 1 சிக்ஸர்)

பௌலிங்: 10-1-53-3

AFG vs ENG

ஒரு உலக சாம்பியனுக்கு எதிராக எப்படியான செயல்பாட்டைக் காட்டவேண்டுமோ அதைக் காட்டியிருக்கிறார் முஜீப் உர் ரஹ்மான். இந்த உலகக் கோப்பையின் மிகப் பெரிய அப்செட்டுக்கு மிகமுக்கிய காரணமாக விளங்கியிருக்கிறார் அவர்.

டெல்லி போன்ற ஆடுகளத்தில் 284 என்ற இலக்கு நிச்சயம் போதுமான ஒன்றல்ல. அதுவும் இங்கிலாந்து போன்ற ஒரு அணிக்கு எதிராக ஆடும்போது, இந்த இலக்கு 35 ஓவர்களிலேயே எட்டப்படும் வாய்ப்பு மிக அதிகம். ஆனால் முதல் இன்னிங்ஸ் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒரு நம்பிக்கை கொடுத்தது. அது இங்கிலாந்து ஸ்பின்னர்கள் செயல்பாடு. 24 ஓவர்களில் 94 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்கள் அந்த அணியின் ஸ்பின்னர்கள். அதை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டது ஆப்கானிஸ்தான்.

mujeeb ur rahman

பவர்பிளேவிலேயே வழக்கம்போல் முஜீப் உர் ரஹ்மானைப் பயன்படுத்தினார் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி. ஆனால் சாதாரணமாக இல்லை. 6 ஓவர்களை ஒரே கட்டமாக அவருக்குக் கொடுத்து முடித்தார். ஸ்டம்ப் லைனில் சீராகப் பந்துவீசி நெருக்கடி கொடுத்த முஜீப், ஜோ ரூட் எனும் மிகப் பெரிய விக்கெட்டை தன் நான்காவது ஓவரில் வெளியேற்றினார். அந்த ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார் அவர். ரூட்டின் விக்கெட் இங்கிலாந்தின் வேரை ஆட்டிப்படைக்க, அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. ஆனால் ஹேரி புரூக்ஸ் ஆப்கானிஸ்தானுக்கு இடைஞ்சலாக இருந்தார். அதனால் மீண்டும் 31வது ஓவரில் அவரை அழைத்துவந்தார் ஷாஹிதி. ப்ரூக் அந்த ஓவரில் சிக்ஸர் அடிக்க, 11 ரன் வந்தது. ஆனால் அடுத்த ஓவரில் சிறப்பாக கம்பேக் கொடுத்தார் முஜீப்.

இரண்டாவது பந்தில் கிறிஸ் வோக்ஸ் காலில் பந்துபட்டது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் அப்பீல் செய்ய, நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் ரிவ்யூ எடுத்து தப்பித்தார் வோக்ஸ். ஆனால் கடைசிப் பந்தில் ஒரு அற்புத ஆஃப் கட்டர் வீசி வோக்ஸின் ஸ்டம்புகளைப் பதம் பார்த்தார் முஜீப். மெய்டன் விக்கெட்டாக அமைந்தது அந்த ஓவர். விக்கெட்டோடு போனவர், அடுத்த ஓவரில் விக்கெட்டுடனேயே கம்பேக் கொடுத்தார். அடுத்த ஓவரின் முதல் பந்தை அவர் கேரம் பாலாக வீச, அதை சரியாகக் கணிக்காமல் அடிக்கப்போன ப்ரூக், எட்ஜாகி கேப்டனிடம் கேட்ச் ஆனார். ஆப்கானிஸ்தானுக்கு இருந்த மிகப் பெரிய தடையை வெளியேற்றி அந்த அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார் முஜீப்.

afghanistan cricket

3 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தியவர், முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கிலும் கலக்கினார். சாம் கரண் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 2 ஃபோர்களும் ஒரு சிக்ஸரும் விளாசினார் முஜீப். மார்க் வுட் வீசிய பந்திலும் ஒரு ஃபோர் அடித்தவர், 16 பந்துகளில் 28 ரன்கள் அடித்து வெளியேறினார்.

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?

"உலகக் கோப்பை போன்ற மிகப் பெரிய மேடையில் உலக சாம்பியன்களை வீழ்த்தியிருப்பது மிகவும் பெருமையான தருணம். இது எங்கள் அணிக்கு மிகப் பெரிய தருணம். இந்த ஒரு நாளுக்காகதான் தொடர்ந்து கடினமாக உழைத்திருக்கிறோம். ஒரு மிகப் பெரிய அணியை நாங்கள் வீழ்த்தியிருக்கிறோம். பேட்ஸ்மேன்கள், பௌலர்கள் எல்லோருமே ஒரு மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு ஸ்பின்னராக பவர்பிளேவில் பந்துவீசுவது மிகவும் கடினமான விஷயம். பௌண்டரி எல்லையில் இரண்டு ஃபீல்டர்கள் மட்டுமே இருப்பார்கள். ஆனால் அதற்காக வலைப்பயிற்சியில் அதிகம் உழைத்திருக்கிறோம்.

afghanistan cricket

புதிய பந்தில் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு கன்சிஸ்டென்ட்டாக பந்துவீச பயிற்சி செய்தோம். அதுதான் என் பந்துவீச்சை மேம்படுத்தியிருக்கிறது. ஸ்டம்ப் லைனில் பந்துவீசவேண்டும் என்பது மட்டும்தான் என் குறியாக இருந்திருக்கிறது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பனி தாக்கம் ஏற்படுத்தும் என்று நம்பினோம். அதனால்தான் என்னை பவர்பிளேவில் பயன்படுத்துமாறு என் கேப்டனிடம் கூறினேன். நாங்கள் இதற்குத் தயாராகவே இருந்தோம்" என்று தங்கள் அணியின் வெற்றியைப் பற்றியும் தன் பந்துவீச்சைப் பற்றியும் கூறினார் முஜீப் உர் ரஹ்மான்.

பேட்டிங்கிலும் கைகொடுத்தது பற்றிப் பேசிய அவர், "நாம் எந்த அளவுக்கு நம் ஆட்டத்தை கட்டமைக்கிறோம் என்பதுதான் முக்கியம். வலைப்பயிற்சியில் வீரர்கள் எனக்குப் பெரும் நம்பிக்கை கொடுத்தார்கள். என்னுடைய பார்ட்னர் வலைப்பயிற்சி முழுவதுமே என்னுடன் தான் இருந்தார். ஒவ்வொரு பந்தையும் அடிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

afghanistan cricket

பேட்டிங்கிலும் நான் பங்களிக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த 20-25 ரன்கள் அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஹெராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். இந்த வெற்றியுமே அவர்களுக்காகத்தான்" என்று கூறினார்.