Afg VS SL
Afg VS SL Twitter
கிரிக்கெட்

“38.1 ஓவரில் கூட வெல்லலாம் என யாரும் எங்களுக்கு சொல்லவில்லை”-தோல்வி பற்றி ஆப். பயிற்சியாளர் வருத்தம்

Rishan Vengai

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் முதலிய 6 ஆசிய நாடுகளுக்கு இடையேயான ஆசியக்கோப்பை தொடர் நடைபெற்றுவருகிறது. ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துமுடிந்த நிலையில், சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.

வாழ்வா? சாவா? போட்டியில் இலங்கை-ஆப்கான் அணிகள் மோதல்!

பங்கேற்ற 6 நாடுகளும் A, B என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் மூன்று-மூன்று அணிகளாக பிரிந்து மோதின. முதலில் நடைபெற்ற லீக் சுற்றில் ஒரு அணி மற்ற இரண்டு அணிகளோடு தலா ஒருமுறை மோதிக்கொள்ளும். A பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றன. இந்த பிரிவில் இருந்த மற்றொரு அணியான நேபாள் 2 போட்டிகளிலும் தோல்வியுற்று தொடரை விட்டே வெளியேறியது.

ind vs pak

இந்நிலையில் B பிரிவில் எந்தெந்த அணிகள் அடுத்தச்சுற்றுக்கு தகுதிபெறும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஏனென்றால் வங்கதேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் மூன்று அணிகளுமே சமபலம் கொண்ட அணிகளாக இருந்தன. இதனால் A பிரிவு போட்டிகளை விட B பிரிவு போட்டிகள் அதிக கவனம் ஈர்த்தன. இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றிருந்த நிலையில், கடைசி லீக் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இலங்கையை எதிர்கொண்டு விளையாடியது ஆப்கானிஸ்தான் அணி.

Afg vs Sl

இலங்கை ஒரு போட்டியில் வெற்றிபெற்றிருந்தாலும் கடைசி போட்டியில் அந்த அணியை குறிப்பிட்ட பந்துகள் வித்தியாசத்தில் அல்லது ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் அணியால் இலங்கை அணியை வெளியேற்றி அடுத்துச்சுற்றுக்கு செல்லமுடியும். இந்நிலையில் வாழ்வா? சாவா? என்ற போட்டியில் இலங்கையை எதிர்கொண்டு விளையாடியது ஆப்கன் அணி.

50 ஓவரில் 291 ரன்கள் அடித்தும் இலங்கைக்கு ஆட்டம் காட்டிய ஆப்கானிஸ்தான்!

முக்கியமான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை பேட்டர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை அளித்தனர். முக்கியமாக விக்கெட் கீப்பர் குசால் மெண்டீஸ் 92 ரன்கள் அடித்து இலங்கையை 291 ரன்களுக்கு எடுத்துச்சென்றார். 292 என்ற பெரிய இலக்கை 37.1 ஓவரில் அடித்துவிட்டால் ஆப்கானிஸ்தான் அணி ரன்ரேட் அடிப்படையில் அடுத்துச்சுற்றுக்கு செல்லலாம் என வரையறுக்கப்பட்டது.

Afg vs Sl

இந்நிலையில் எப்படியாவது சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிட வேண்டும் என்ற பெரிய எண்ணத்தில் அற்புதமான ஆட்டத்தை ஆடியது ஆப்கானிஸ்தான் அணி. தொடக்க வீரர்கள் சொதப்பினாலும் அடுத்துவந்த அனைத்து வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் சாஹிதி மற்றும் ரஹ்மத் ஷா இருவரும் வலுவான அடித்தளத்தை அமைக்க, அடுத்து வந்த முகமது நபி 6 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டினார்.

Nabi

அடுத்தடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சிக்சர்களாக பறக்கவிட, கடைசி நேரத்தில் அற்புதமாக செயல்பட்ட ரசீத் கான் போட்டியை வெற்றிக்கு அருகாமைக்கு அழைத்து சென்றார். 37 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு ஆப்கானிஸ்தான் 289 ரன்கள் எடுத்திருந்தபோது, 1 பந்துக்கு 3 ரன்கள் தேவை என்ற அழுத்தமான நிலையில் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கடைசிவரை போராடிய ரசீத் தோல்வியின்போது கலங்கியபடி காணப்பட்டார்.

38.1 ஓவரில் கூட வெல்லலாம் என யாரும் எங்களுக்கு சொல்லவில்லை! - ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர்

37.1 ஓவர்களில் 292 ரன்கள் அடிக்கும் இலக்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டாலும், பின்னர் அவர்களுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளாக 37.5 ஓவரில் 295 ரன்கள் அல்லது 38.1 ஓவர் முடிவில் 297 ரன்கள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. குறிப்பிட்ட இலக்கை விரைவாக எட்டும் இதுபோன்ற போட்டிகளில் இலக்குகள் மாற்றியமைக்கப்படுவது இயல்பான ஒன்று தான். இது இதற்கு முன்னரும், ஐபிஎல் போட்டிகளில் கூட நடந்துள்ளது. ஆனால் இதுகுறித்த எந்த விவரமும் தெரியாத ஆப்கானிஸ்தான் வீரர்கள் பவுண்டரி அல்லது சிக்சருக்கு முயற்சி செய்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முடிவில் கடைசிவரை களத்தில் இருந்த ரசீத் கானால் கூட எதையும் செய்யமுடியவில்லை.

Afg vs Sl

இந்நிலையில் இதுகுறித்து பேசியிருக்கும் ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜொனாதன் டிராட், “37.1 ஓவர்களில் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று மட்டும் தான் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த பந்துகளில் கூட 295 அல்லது 297 ரன்களை எடுக்க முடியும் என்று எங்களுக்கு யாரும் தெரிவிக்கவில்லை. 38.1 ஓவர்களில் 297 ரன்களை அடித்தால் எங்களால் அடுத்தச்சுற்றுக்கு செல்லமுடியும் என்று ஒருபோதும் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

இது யாருடைய தவறு?

உண்மையில் போட்டி நடுவர்தான் ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து வழிகளையும் தெரிவித்திருக்க வேண்டும் என்றாலும், அவர்களின் ஊழியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இது போன்ற போட்டிகளின்போது கவனமாக இருந்திருக்க வேண்டும். சமீப காலத்தில் சிக்கலான DLS கணக்கீடுகள் கூட அணியின் ஆய்வாளரால் கவனிக்கப்படுகின்றன. அதனுடன் ஒப்பிடும்போது, ​ரன் ரேட் அடிப்படையிலான கணக்கீடுகளை நிச்சயம் சப்போர்டிங் ஸ்டாஃப் மற்றும் அனலிஸ்ட் அனைவரும் கவனித்திருக்க வேண்டும்.