ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் மீண்டும் திருமணம் செய்துகொண்டதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், அதுகுறித்த செய்தியை அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளவர் ரஷீத் கான். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் ஆகஸ்ட் 2, 2025 அன்று 2வது திருமணம் செய்துகொண்டார். ஆனால், ரஷீத் தனது மனைவியின் முகத்தை வெளியிடவில்லை. இதன்காரணமாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அவரது மனைவியைப் பற்றி தொடர்ந்து ஊகித்து வருகின்றனர். இந்தச் சூழலில்தான் நெதர்லாந்தில் தன்னுடைய அறக்கட்டளை தொடக்க விழாவில் அவர் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்வின்போது பாரம்பரிய ஆப்கானிய உடையில் ஒரு பெண்ணின் அருகில் ரஷீத் அமர்ந்திருந்தார். இந்தப் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின. இதனால் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் எனவும், இன்னும் சிலர் அந்தப் பெண் யார் எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு ரஷீத் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், தன்னுடன் இருப்பது மனைவி என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ஆகஸ்ட் 2, 2025 அன்று, என் வாழ்க்கையின் ஒரு புதிய மற்றும் அர்த்தமுள்ள அத்தியாயத்தைத் தொடங்கினேன். என் திருமணத்தை முடித்து, நான் எப்போதும் எதிர்பார்த்த அன்பு, அமைதி மற்றும் கூட்டாண்மையை உள்ளடக்கிய ஒரு பெண்ணை மணந்தேன். சமீபத்தில் என் மனைவியை ஒரு தொண்டு நிகழ்வுக்கு அழைத்துச் சென்றேன், மிகவும் எளிமையான ஒன்றிலிருந்து அனுமானங்கள் உருவாக்கப்படுவதைப் பார்ப்பது துரதிர்ஷ்டவசமானது.
உண்மை நேரடியானது, அவள் என் மனைவி, மறைக்க எதுவும் இல்லாமல் நாங்கள் ஒன்றாக நிற்கிறோம். கருணை, ஆதரவு மற்றும் புரிதலைக் காட்டிய அனைவருக்கும், நன்றி" என அதில் பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம் அவர் 2வது திருமணம் செய்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. ரஷீத், தனது 2வது மனைவியைப் பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை என்றாலும், அவரது அறிக்கை வைரலான படத்தைச் சுற்றியுள்ள ஊகங்களை திறம்பட முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. முன்னதாக, ரஷீத் கானின் முதல் திருமணம், அக்டோபர் 2024இல் காபூலின் இம்பீரியல் கான்டினென்டல் ஹோட்டலில் நடைபெற்றது. அங்கு, அவரது மூன்று சகோதரர்களும் அதேநாளில் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.