ruturaj - abimanyu
ruturaj - abimanyu X
கிரிக்கெட்

மீண்டும் சர்ஃபராஸ் கானை ஏமாற்றிய BCCI! ருதுராஜுக்கு மாற்றுவீரராக அபிமன்யு ஈஸ்வரன் அறிவிப்பு!

Rishan Vengai

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி 1-1 என தொடரை சமன்செய்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வெற்றிப்பெற்று தொடரை சமன்நிலையில் வைத்திருந்தன. பின்னர் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனின் அசத்தலான சதத்தால் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

IND vs SA

இந்நிலையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிக்கான அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா முதலிய ஸ்டார் வீரர்கள் திரும்புவதால் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்கா மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதேயில்லை என்பதால், ரோகித் சர்மா தலைமயிலான இந்த அணி வெற்றியை ருசிக்கும் என்ற நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது.

ருதுராஜ் கெய்க்வாட் விலகல்! மாற்று வீரராக அபிமன்யு ஈஸ்வரன்!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது அவர் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஒருநாள் தொடரின் 2-வது போட்டியில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் 3-வது ஒருநாள் போட்டியில் இடம்பெறாமல் இருந்தார்.

பின்னர் அவர் சிகிச்சைக்காக என்சிஏ கேம்பிற்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அவரால் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாது என மருத்துவக்குழு தெரிவித்திருப்பதாக பிசிசிஐ கூறியுள்ளது.

abimanyu

இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நீண்டகாலமாக டெஸ்ட் அணியில் இடம்பெறுவதற்காக போராடிவரும் சர்ஃபராஸ் கான், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக இணைக்கப்படுவார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், மீண்டும் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மாறாக இந்திய ஏ அணியில் சர்ஃபராஸ்கானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ஏ அணியில் இணைக்கப்பட்ட சர்ஃபராஸ் கான்!

Sarfaraz Khan

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின்போதே இந்திய ஏ அணி மற்றும் தென்னாப்பிரிக்க ஏ அணிகள் மோதவிருக்கின்றன. இந்தப்போட்டியில் விளையாடுவதற்கு சர்ஃபராஸ் கான், ராஜத் பட்டிதார், ரிங்கு சிங் மற்றும் ஆவேஸ் கான் முதலிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியிலிருந்து ஹர்சத் ரானா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் விலகியுள்ளனர்.