2010-ல் முகமது அமீரின் ஃபிக்சிங் ஊழல் வெளிப்பட்டது. அச்சம்பவத்தை நினைவுகூர்ந்த அப்துல் ரசாக், ஏஜண்ட் மஜார் மஜீத் மற்றும் மூன்று வீரர்களுக்கு இடையே நடந்த சூதாட்டத் திட்டங்களை தன்னுடைய நண்பர் கண்டுபிடித்ததாக கூறினார். ஷாகித் அஃப்ரிடி, அமீரை உண்மையை ஒப்புக்கொள்ளச் சொன்னார். அமீர் மறுத்தபோது, அஃப்ரிடி அவரை அறைந்தார். இதனால் அமீர் கண்ணீர் விட்டு அழுதார், சதித்திட்டத்தை ஒப்புக்கொண்டார்.
இன்ஸ்விங்கர்களால் மிரட்டிய பாகிஸ்தான் பவுலர் முகமது அமீரின் கிரிக்கெட் பயணம், விரைவிலேயே புகழின் உச்சிக்கு சென்று பின்னர் அவருடைய ஃபிக்சிங் ஊழலால் படுகுழியில் விழுந்தது.
2010-ல் ஓவலில் இங்கிலாந்துக்கு எதிராக 5/52 விக்கெட்டுகள் எடுத்து இங்கிலாந்தில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானை வெற்றிக்கு அழைத்துச்சென்ற அமீர், லார்ட்ஸில் நடைபெற்ற நான்காவது டெஸ்டில் 6/84 விக்கெட்டுகள் வீழ்த்தி லார்ட்ஸ் ஹானர்ஸ் போர்டிலும் தனது பெயரைப் பொறித்தார்.
ஆனால் லார்ட்ஸ் டெஸ்டில் சூதாட்டக் கும்பலிடமிருந்து பணம் பெறுவதற்காக அமீர் மற்றும் சக பவுலர் முகமது ஆசிஃப் இருவரும் வேண்டுமென்றே நோ-பால்களை வீசியது தெரியவந்தது. விளையாட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஐ.சி.சி. ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அமீருக்கு 5 ஆண்டுகள் விளையாட தடைவிதிக்கப்பட்டு 6 மாதம் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டு. முகமது ஆசிஃப் மற்றும் சல்மான் பட் இருவரும் 7 ஆண்டுகள், 10 ஆண்டுகள் தடையும் பெற்றனர். வீரர்களின் ஏஜண்டான மஜார் மஜீத்துக்கு இரண்டு ஆண்டுகள் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து 2016ஆம் ஆண்டு மீண்டும் அணிக்கு திரும்பிய முகமது அமீர், 2017-ல் பாகிஸ்தானை சாம்பியன்ஸ் டிராபியின் வெற்றிக்கு அழைத்துச்சென்றார். கடைசியாக 2024 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய அவர், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.
2010ஆம் ஆண்டு முகமது அமீர் ஸ்பாட் ஃபிக்சிங் செய்தது அணிக்கு எப்படி தெரியவந்தது என்பதை விளக்கியிருக்கும் அப்துல் ரசாக், "என்ன நடந்தது என்றால் மஜார் மஜீத் என் நண்பரிடம் வந்து தனது தொலைபேசிகளில் எதோஒன்றை சரிசெய்யச் சொன்னார். என் நண்பர் இரவில் தாமதமாக தொலைபேசியை சரிசெய்ய வேலைசெய்தபோது தான், மஜார் மற்றும் மூன்று வீரர்களுக்கு இடையே போட்டியில் சூதாட்டத்திற்கான திட்டங்களை விவரிக்கும் பல செய்திகளைக் கண்டார். பின்னர் அவரின் நண்பர் ரசாக்கிடம் உடனடியாக செய்தியை காட்ட, அதை மூத்தவீரரான ஷாகித் அஃபிரியிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், "அப்போது 18 வயது நிரம்பியிருந்த அமீரை அஃப்ரிடி தனது அறைக்கு அழைத்துசென்று, என்னை வெளியே காத்திருக்கச் சொன்னார். அமீருடன் கோபமாக உரையாடிய அஃபிரிடி உண்மையைச் சொல்லச் சொன்னது எனக்குக் கேட்டது. அவர் அதை மறுத்தபோது, அமீரை சத்தமாக அறைந்த சத்தம் கேட்டு நான் உள்ளே சென்று பார்த்தேன். அப்போது அமீர் கண்ணீர் விட்டு அழுதார், சதித்திட்டத்தை ஒப்புக்கொண்டார், மேலும் அனைத்து விசயங்களும் வெளிப்பட்டது" என்று ரசாக் நிகழ்ந்ததை நினைவு கூர்ந்தார்.