ind vs nz x
கிரிக்கெட்

நியூசிலாந்தில் இந்தியா டெஸ்ட் தொடரை வெல்லும்! - ஏபிடி வில்லியர்ஸ்

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என வெல்லும் என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கணித்துள்ளார்.

Rishan Vengai

நியூசிலாந்து மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை 1-0 என வெல்லும் என ஏபிடி வில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் கணித்துள்ளார். இந்தியாவின் டாப் ஆர்டர் மற்றும் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களின் மோதல் தொடரின் முடிவை தீர்மானிக்கும் என அவர் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு எப்போதும் சவால் அளிக்கக்கூடிய அணியாகவே இதுவரை நியூசிலாந்து இருந்துள்ளது. ஒருபக்கம் ஆஸ்திரேலியா தான் இந்தியாவை முக்கியமான தருணங்களில் தோற்கடித்தது என்று சொல்லப்பட்டாலும், நியூசிலாந்து அணி 2019 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, சொந்தமண்ணில் இந்தியாவை 0-3 என ஒயிட்வாஷ் செய்தது என பல இதயம் உடைக்கும் தோல்விகளை நியூசிலாந்து கொடுத்துள்ளது.

டெஸ்ட் தொடரை பொறுத்தவரையில் நியூசிலாந்து அவர்களின் சொந்தமண்ணில் வலுவான அணியாகவே இருந்துள்ளது. 1968ஆம் ஆண்டு மன்சூர் அலி கான் பட்டோடி தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக நியூசிலாந்து மண்ணில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதுவே இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டு மண்ணில் பெற்ற முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாகும்.

அதற்குபிறகு 41 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மீண்டும் நியூசிலாந்து மண்ணில் இந்தியாவால் டெஸ்ட் தொடரை வெல்லமுடிந்தது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை தோனி தலைமையிலான இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது.

நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரை ஏற்கனவே இந்திய அணி வென்றிருக்கிறது என்றாலும், உலகக்கோப்பைக்கு முன்னதாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்தியா எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தசூழலில் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ஏபிடி வில்லியர்ஸ், இந்தியா நியூசிலாந்து மண்ணில் 1-0 என டெஸ்ட் தொடரை வெல்லும் என கணித்துள்ளார்.

அவருடைய வீடியோவில் பேசியிருக்கும் அவர், “இந்திய அணிக்கு நியூசிலாந்தின் ஆடுகளவும், வேகப்பந்துவீச்சும் சவாலானதாக இருக்கும். இந்தியாவின் டாப் ஆர்டர் வீரர்களுக்கும், நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஜேமிசன், மாட் ஹென்றி, டஃபி இடையேயான மோதல் தொடரை தீர்மானிக்கும். அதேபோல மிட்செல் சாண்டனரை இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்ற மோதல் கவனிக்க வைக்கும். என்னை பொறுத்தவரை சுப்மன் கில் தலைமையிலான இந்தியா 1-0 என டெஸ்ட் தொடரை வெல்லும்” என்று பேசியுள்ளார்.