dean elgar
dean elgar PT
கிரிக்கெட்

உங்களுக்கு டெண்டுல்கர்.. எங்களுக்கு டீன் எல்கர்! - கடைசி போட்டியில் எமோசனல் நோட்ஸ் உடன் வந்த ரசிகர்!

Rishan Vengai

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பிறகு அனைத்து கிரிக்கெட் வடிவத்திலிருந்தும் ஓய்வுபெறப்போவதாக, தற்போதைய தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் கேப்டனான டீன் எல்கர் அறிவித்தார். 2011-ம் ஆண்டு முதன்முதலாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான எல்கர், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸ்களில் டக்அவுட்டாகி சொதப்பினார். ஆனால் “முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்பதை உடைத்தெரிந்த டீன் எல்கர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த தென்னாப்பிரிக்கா வீரர்களில் ஒருவராக தன்னை உருமாற்றி ஒரு எடுத்துக்காட்டாக மாறினார்.

dean elgar

12 வருட டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 14 சதங்கள், 23 அரைசதங்களை விளாசியிருக்கும் எல்கர் 5347 ரன்களை குவித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட எல்கர், வெஸ்ட் இண்டீஸை அவர்களுடைய சொந்த மண்ணிலும், இந்தியாவை தென்னாப்பிரிக்காவில் தோற்கடித்தார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவர்களுடைய சொந்த மண்ணிலேயே வைத்து சமன்செய்தார். தற்போதைய இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரையும் விட்டுக்கொடுக்காமல் 31 ஆண்டுகால ஆதிக்கத்தை தொடர்ந்துள்ளார்.

உங்களுக்கு டெண்டுல்கர்.. எங்களுக்கு டீன் எல்கர்!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டியில் சிறந்த கேப்டன்சிப்பை வெளிப்படுத்திய எல்கர், இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறவைத்து வழிநடத்தினார். இருப்பினும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தது தென்னாப்பிரிக்கா அணி.

dean elgar

இந்நிலையில் தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் கேப்டன் எல்கரை கௌரவமாக அனுப்பிவைக்கும் விதமாக, தங்களுடைய கேப்டனை இரண்டுபக்கமும் வரிசையாக நின்று கைத்தட்டி சக வீரர்கள் வரவேற்றனர். அதேபோல களத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா ரசிகர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ஒரு தென்னாப்பிரிக்கா ரசிகர் எல்கர் மீதிருக்கும் அளவுக்கடந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக, “உங்களுக்கு சச்சின் டெண்டுல்கர், எங்களுக்கு டீன் எல்கர்” என்ற பதாகையை ஏந்தி அவருடைய எமோசலனை வெளிப்படுத்தினார்.

தன்னுடைய கடைசி டெஸ்ட் இன்னிங்ஸில் விளையாடிய டீன் எல்கர் 12 ரன்களில் கோலியின் கைகளில் கேட்ச்சை கொடுத்து வெளியேறினார். அப்போது கோலி விக்கெட்டை கொண்டாடாமால் அவருக்கு தலைவணங்குமாறு ரசிகர்களுக்கு கூறி இரண்டு கைகளையும் உயர்த்தி மரியாதை செலுத்தினார். அதேபோல் அவர் களத்திலிருந்து வெளியேறும் போது கட்டியணைத்து வழியனுப்பினார்.