Glenn Maxwell
Glenn Maxwell ICC
கிரிக்கெட்

மறக்கவே முடியாத இன்னிங்ஸ்! ஒரே போட்டியில் மேக்ஸ்வெல் படைத்த 5 இமாலய சாதனைகள்!

Rishan Vengai

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியானது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் காலத்திற்கும் நினைவுகூறப்போகும் ஒரு போட்டியாக அமைந்தது.

Ibrahim

ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 292 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி, ஒரு கட்டத்தில் 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைமையில் இருந்தது. ஆனால் அதற்கு பிறகு ஒரு நம்பமுடியாத ஆட்டம் ஆடிய க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் கம்மின்ஸ் இருவரும் ஆஸ்திரேலியா அணியை மீட்கவே முடியாத இடத்திலிருந்து மீட்டு வெற்றிக்கு அழைத்து சென்றனர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அசாத்தியமான ஆட்டம் ஆடிய க்ளென் மேக்ஸ்வெல் 157 ஸ்டிரைக்ரேட்டில் 21 பவுண்டரிகள், 10 சிக்சர்கள் என பறக்கவிட்டு உலகக்கோப்பையில் இரட்டை சதமடித்து அசத்தினார்.

Maxwell

மேக்ஸ்வெல்லின் தலைசிறந்த ரன் சேஸ் மூலம் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணி, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு பிறகு 3வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே போட்டியில் பல உலக சாதனைகளை படைத்து வரலாறு படைத்துள்ளார் க்ளென் மேக்ஸ்வெல்.

ஒரே போட்டியில் மேக்ஸ்வெல் படைத்த பல உலக சாதனைகள்!

ரன் சேஸிங்கில் அதிகபட்ச ரன்கள்:

ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் ரன் சேஸிங்கில் அதிகபட்ச ரன்கள் குவித்த முதல் வீரராக மேக்ஸ்வெல் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2011 உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அடித்த 158 ரன்களே ரன் சேஸிங்கில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக இருந்தது. இந்நிலையில், க்ளென் மேக்ஸ்வெல் அந்த சாதனையை முறியடித்து 201* ரன்களுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

Glenn maxewell

அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் ரன் சேஸிங்கில் அதிக ரன்கள் அடித்தவராக மாறி சாதனை படைத்துள்ளார் மேக்ஸ்வெல். இதற்கு முன் பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமன் அடித்த 193 ரன்கள் சாதனையை முறியடித்துள்ளார்.

இரட்டை சதமடித்த முதல் மிடில் ஆர்டர் வீரர்:

இதுவரை ஒருநாள் போட்டிகளில் சதமடித்த அனைத்து வீரர்களும் தொடக்கவீரர் பேட்ஸ்மேனாக மட்டுமே இருந்துள்ளனர். இந்நிலையில் மிடில் ஆர்டரில் களமிறங்கி 201* ரன்களை குவித்திருக்கும் க்ளென் மேக்ஸ்வெல், தொடக்கவீரர் அல்லாத ஒரு வீரராக இரட்டை சதமடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

Maxwell

இதன்மூலம் தொடக்க வீரர் அல்லாத ஒரு மிடில் ஆர்டர் வீரர் அடித்த அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஏற்கனவே, 2009ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 194 ரன்கள் அடித்த ஜிம்பாப்வே வீரர் சார்லஸ் கோவென்ட்ரியின் சாதனையை க்ளென் மேக்ஸ்வெல் முறியடித்துள்ளார்.

8வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்:

8வது விக்கெட்டுக்கு 202 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் கம்மின்ஸ் ஜோடி, உலகக்கோப்பையில் 7வது விக்கெட் அல்லது அதற்கு கீழான விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இணையாக மாறி சாதனை படைத்தது.

Maxwell

அதிகபட்ச ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர்:

201 ரன்களை குவித்த க்ளென் மேக்ஸ்வெல் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் அடித்த முதல் ஆஸ்திரேலியா வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு ஷேன் வாட்ஸன் அடித்த 185 ரன்களே ஒரு ஆஸ்திரேலியா வீரர் அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.

அதிவேக இரட்டை சதம்:

அதிவேக இரட்டை சதம் அடித்தவர்களில் பட்டியலில் 128 பந்துகளில் இரட்டை சதம் அடித்த க்ளென் மேக்ஸ்வெல் இரண்டாவது இடம்பிடித்து அசத்தியுள்ளார். இந்திய வீரர் இஷான் கிஷான் 126 பந்துகளில் அடித்த சாதனையை 2 பந்துகளில் தவறவிட்டார் மேக்ஸ்வெல்.

maxwell

உலகக்கோப்பையில் 3வது வீரராக இரட்டை சதம்:

உலகக்கோப்பை வரலாற்றில் இதற்கு முன் க்றிஸ் கெயில் மற்றும் மார்டின் கப்டில் இரண்டு வீரர்கள் மட்டுமே இரட்டை சதமடித்து அசத்தியிருந்தனர். இந்நிலையில் 3வது வீரராக அந்த இமாலய சாதனையை படைத்து அசத்தியுள்ளார் மேக்ஸ்வெல். அதுமட்டுமல்லால் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த 9வது வீரராகவும், இந்திய மண்ணில் இரட்டை சதமடித்த 5வது வீரராகவும் மாறி சாதனை படைத்துள்ளார்.