Ashwin | Axar Patel
Ashwin | Axar Patel Shahbaz Khan
கிரிக்கெட்

இந்தியா vs இங்கிலாந்து 5வது டெஸ்ட்: கவனிக்கவேண்டிய 5 விஷயங்கள்..!

Viyan

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டி தரம்சாலாவில் வியாழக்கிழமை தொடங்குகிறது. ஏற்கெனவே 4 போட்டிகளில் முடிவடைந்திருக்கும் நிலையில், இந்திய அணி 3-1 என தொடரை வென்றுவிட்டது. என்னதான் இந்திய அணி தொடரை வென்றுவிட்டாலும், இந்தப் போட்டி பல விஷயங்களுக்காக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு இந்தப் போட்டியின் வெற்றி இந்தியாவுக்கு நிச்சயம் முக்கியம். அதைக் கடந்த இன்னும் பல முக்கியமான தருணங்கள் இந்த போட்டியில் காத்திருக்கின்றன. அவற்றுள் டாப் 5 இங்கே...

ரவிச்சந்திரன் அஷ்வின் 100

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவி அஷ்வின் மிகப் பெரிய மைல்கல்லை ஏற்கெனவே இந்தத் தொடரில் அடைந்திருந்தார். 500 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது இந்தியர் என்ற மகத்தான சாதனை படைத்தார். இப்போது அடுத்ததாக இன்னொரு பெரிய சாதனை படைக்கக் காத்திருக்கிறார் அஷ்வின். இந்தப் போட்டி அவருக்கு 100வது டெஸ்ட் போட்டியாக அமையப்போகிறது. இதன் மூலம் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14வது இந்திய வீரராகப்போகிறார் அஷ்வின். இந்தத் தொடரின் தொடக்கத்தில் அஷ்வின் பெரிய தாக்கம் ஏற்படுத்தத் தவறியிருந்தாலும், ராஞ்சியில் நடந்த நான்காவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அசத்தலாக செயல்பட்டு 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவர். தன் 100வது போட்டியிலும் அப்படியொரு அசத்தல் பெர்ஃபாமன்ஸ் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். ஒரு ஸ்பெஷலான தருணத்தில், ஸ்பெஷலான செயல்பாடுகளை எதிர்பார்க்கலாம் தானே!

ஜானி பேர்ஸ்டோ 100

Jonny Bairstow

ரவிச்சந்திரன் அஷ்வினைப் போல, ஜானி பேர்ஸ்டோவும் தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடக் காத்திருக்கிறார். 2012ம் ஆண்டு டெஸ்ட் அரங்கில் அறிமுகம் ஆன அவர், தொடர்ந்து இங்கிலாந்து அணியின் முக்கியமான வீரராக விளங்கி வருகிறார். அஷ்வினைப் போலவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவரது டெஸ்ட் பயணம் தொடங்கியது. இதுவரை 36.42 என்ற சராசரியில் 5974 ரன்கள் எடுத்திருக்கிறார் அவர். ஆனால் இதுவரை இந்தத் தொடரில் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. 4 போட்டிகளிலும் சேர்ந்து மொத்தமே 170 ரன்கள் தான் அடித்திருக்கிறார். ஒரு அரைசதம் கூட அவர் அடிக்கவில்லை. இந்நிலையில், இந்த மைல்கல் போட்டியில் அவர் அதை மாற்றுவார் என்று எதிர்பார்க்கலாம்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் 700

James Anderson

அவர்கள் இருவரையும் விட மிகப் பெரிய மைல்கல்லை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன். ஏற்கெனவே அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை வசப்படுத்தியிருக்கும் அவர், இப்போது 700வது டெஸ்ட் விக்கெட்டை நெருங்கிக்கொண்டிருக்கிறார். இந்தத் தொடரில் இதுவரை 8 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் அவர், இன்னும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினால் அதை அடைந்துவிடுவார். இங்கிலாந்து பௌலர்கள் இத்தொடரில் தடுமாறியிருந்தாலும், 41 வயதிலும் தொடர்ந்து அசத்திக்கொண்டிருக்கிறார் ஆண்டர்சன். அதிலும் ஐந்தாவது போட்டி ஸ்விங்குக்கு சாதகமாக இருக்கும் தரம்சாலாவில் நடக்கவிருப்பதால் அது நிச்சயம் நடக்கும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

இந்தியாவின் 4வது வெற்றி

இந்திய அணி ஏற்கெனவே இந்தத் தொடரில் 3 போட்டிகளில் வென்றுவிட்டது. இதற்கு முன் இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரில் இரு முறை மட்டுமே 4 டெஸ்ட் போட்டிகளில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியில் வென்றால் இந்தியா மூன்றாவது முறையாக ஒரு தொடரில் 4 போட்டிகளை வென்று அசத்தும். தொடர் வெற்றி ஒட்டுமொத்த அணியின் நம்பிக்கையயும் பன்மடங்கு அதிகரித்திருக்கும். அதுமட்டுமல்லாமல் பும்ரா அணிக்குத் திரும்புகிறார். அதனால் நிச்சயம் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

ரஜத் படிதாருக்கான கடைசி வாய்ப்பு

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தத் தொடரில் அறிமுகம் ஆனார் ரஜத் படிதார். ஆனால் இந்தத் தொடர் அவருக்கு எதிர்பார்த்தது போல் நடக்கவில்லை. 3 போட்டிகளிலும் சேர்த்தே வெறும் 63 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார் அவர். சர்ஃபராஸ் கான், துருவ் ஜுரெல் ஆகியோர் அசத்தியிருக்கும் நிலையில் படிதார் தொடர்ந்து தடுமாறியிருக்கிறார். இந்திய அணி இந்தப் போட்டியில் அவருக்கு கடைசி வாய்ப்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடினமான தருணங்களில் இந்திய வீரர்கள் சோபித்திருக்கும் நிலையில், படிதாரும் அப்படியொரு தருணத்தில் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.