2026 டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில், தென்னாப்பிரிக்கா இந்தியாவை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடக்க வீரர்களின் தோல்வி, பார்ட்னர்ஷிப் இல்லாமை, அணிக்காம்பினேஷன் மற்றும் பவுலிங்கில் சொதப்பல் ஆகியவை இந்தியாவின் தோல்விக்கான முக்கிய காரணங்களாகும். இதனால் அடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை பரபரப்பாக நடந்துவருகிறது. லீக் சுற்றுகள் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் முதலிய 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.
இந்தசூழலில் எந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் என்ற பெரிய மோதலை எதிர்நோக்கி தொடர் நகர்ந்துள்ளது. இன்று நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பதிவுசெய்தது.
மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ள இந்திய அணி மிகப்பெரிய அளவில் ரன்ரேட்டில் அடிவாங்கியுள்ளது. பேட்டிங், பவுலிங் மற்றும் அணி காம்பினேஷன் என அனைத்திலும் இந்திய அணி சொதப்பிய நிலையில், தோல்விக்கான காரணங்களை இங்கே பார்க்கலாம்..
இந்திய அணியின் தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் தொடர்ந்து டக் அவுட்களில் வெளியேறுவது, இந்திய அணியின் பேட்டிங் வரிசையை பாதிக்கிறது.
வலுவான பேட்டிங் வரிசை வேண்டும் என்பதாலேயே 8 பேட்ஸ்மேன்கள் கொண்ட கலவையும் இந்தியா களமிறங்கியுள்ளது. ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு தொடக்க வீரர் 0 ரன்னிலும் வெளியேறுவது, ஒரு பேட்ஸ்மேன் இல்லாமல் 7 பேட்டர்களுடன், 10 வீரர்களுடன் மட்டுமே விளையாடும் ஒரு உணர்வை தருகிறது.
இது அடுத்துவரும் பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தத்தை அதிகரித்து விக்கெட்டுகள் சரிய வழிவகுக்கிறது. இன்றைய போட்டியிலும் கேப்டன் சூர்யகுமாருக்கு அதுதான் நடந்தது.
இன்றைய போட்டியில் ஒரு பார்ட்னர்ஷிப் வந்திருந்தால் கூட இந்திய அணியின் பேட்டிங் பலத்திற்கு இந்திய அணி வெற்றியின் அருகாமைக்காவது சென்றிருக்கும். ஆனால் ஒரு பேட்ஸ்மேன் கூட பார்ட்னர்ஷிப் அமைக்க நினைக்காததும், பேட்ஸ்மேன்கள் இறங்கியதும் அடிக்க முயல்வதும் இந்திய அணிக்கு தோல்வியை பரிசளித்தது.
2024 டி20 உலகக்கோப்பை, 2025 சாம்பியன்ஷ் டிராவி என இரண்டு கோப்பைகள் வென்ற தொடரிலும் இந்திய அணியின் காப்பானாக அக்சர் பட்டேல் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை களமிறக்கியது இந்தியாவிற்கு பாதகமாக அமைந்தது. துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட போதும் அவரை டிராப் செய்தது அணியின் காம்பினேஷனை மொத்தமாக குலைத்தது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்த தோல்வி அடுத்த 2 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணி ஒரு குழுவாகவே பவுலிங்கில் சொதப்பியது. கடைசி 4 போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் இருவரும் புதிய பந்தில் பந்துவீசினர். அதேபோல வருண் சக்கரவர்த்தியையும் சரியான இடத்தில் பயன்படுத்தவில்லை. பும்ராவிற்கு முதலில் பவுலிங் கொடுத்து விக்கெட் விழுந்தாலும், மிடில் ஓவர்களில் தென்னாப்பிரிக்கா பவுலர்கள் டாமினேட் செய்யும்போது சூர்யகுமாரின் கீ பவுலரான பும்ரா, வருண் சக்கரவர்த்தி இருவருமே பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
இதை எல்லாம் கடந்து ஹர்திக் பாண்டியா மற்றும் துபே இருவரும் நோ பால்களை வீசியது பெரிய பாதகமாக மாறியது. இந்திய அணி மொத்தமாக பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலுமே இந்தப்போட்டியில் சொதப்பியது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு தள்ளியுள்ளது.