pakistan coaches
pakistan coaches X
கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு அடுத்த அடி! ஒரே நேரத்தில் ராஜினாமா செய்த 3 முன்னாள் பயிற்சியாளர்கள்!

Rishan Vengai

2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்புவரை, பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் பயணம் உலகத்தின் நம்பர் 1 அணியாக உச்சத்தில் இருந்தது. அந்த அணி டெஸ்ட் போட்டிகளில் குறிப்பிடத்தக்க செயல்திறன், நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மைதானத்தில் டிரா செய்தது மற்றும் இலங்கைக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது என தொடர்ச்சியாக ஏறுமுகத்தையே கண்டது. ஆனால் உலகக்கோப்பைக்கு முன்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 1-2 என இழந்தது. தொடர்ந்து உலகக்கோப்பையின் 9 லீக் போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றிபெற்று அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது.

Babar Azam

3 மாதத்திற்கு முன்புவரை உலகத்தின் நம்பர் 1 அணியாக இருந்த பாகிஸ்தான் அணி, உலகக்கோப்பையின் தோல்விக்கு பிறகு முழுவதுமாக கலைக்கப்பட்டது. அதிகப்படியான விமர்சனத்தால் தன்னுடைய கேப்டன் பதவியை பாபர் அசாம் ராஜினாமா செய்தார். தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் இயக்குநராக இருந்த மிக்கி ஆர்தர், பயிற்சியாளர்களாக இருந்த பிராட்பர்ன் மற்றும் ஆண்ட்ரூ புட்டிக் மூன்று பேரின் பதவிகள் பறிக்கப்பட்டு NCA அதிகாரிகளாக பணிமாற்றம் செய்யப்பட்டன.

இரண்டு புதிய கேப்டன்கள்! புதிய பயிற்சியாளர்கள் அறிவிப்பு!

பாபர் அசாம் கேப்டன் பதவி நீக்கத்திற்கு பிறகு பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ஷாஹீன் அப்ரிடியும், டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷான் மசூத்தையும் நியமித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். உடன் கிரிக்கெட் இயக்குநராகவும் தலைமை பயிற்சியாளராகவும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஹஃபீஷ், பேட்டிங் பயிற்சியாளராக ஆடம் ஹோலியோக்கும் நியமிக்கப்பட்டனர். அதேநேரத்தில் உமர் குல் மற்றும் சயீத் அஜ்மல் ஆகியோர் முறையே வேகப்பந்து வீச்சு மற்றும் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

பதவியை ராஜினாமா செய்த முன்னாள் பாகிஸ்தான் பயிற்சியாளர்கள்!

புதிய பயிற்சியாளர்கள் நியமனத்தை தொடர்ந்து தற்போது முன்னாள் பயிற்சியாளர்களாக இருந்த மிக்கி ஆர்தர், கிராண்ட் பிராட்பர்ன் மற்றும் ஆண்ட்ரூ புட்டிக் மூன்று பேரும் ராஜினாமா செய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தங்களுடைய NCA பதவிகளில் இருந்து மிக்கி ஆர்தர், கிராண்ட் பிராட்பர்ன் மற்றும் ஆண்ட்ரூ புட்டிக் மூன்று பேரும் ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.