IND vs WI
IND vs WI Facebook
கிரிக்கெட்

IND vs WI: மழையால் 2வது டெஸ்ட் டிரா.. நழுவிய வெற்றி வாய்ப்பு: தொடரை கைப்பற்றியது இந்தியா

Justindurai S

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 438 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 255 ரன்களும் எடுத்தன.

183 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை அதிரடியாக ஆடிய இந்திய அணி 24 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 181 ரன்களுடன் 'டிக்ளேர்' செய்து, வெஸ்ட் இண்டீசுக்கு 365 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கேப்டன் ரோகித் சர்மா 57 ரன்களும், ஜெய்ஸ்வால் 38 ரன்களும் விளாசினர். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 33 பந்துகளில் அரைசதம் நொறுக்கினார். இஷான் கிஷன் 52 ரன்களுடனும் (34 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), சுப்மன் கில் 29 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

IND vs WI

இதையடுத்து மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 4-வது நாள் முடிவில் 32 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. தேஜ்நரின் சந்தர்பால் (24 ரன்), பிளாக்வுட் (20 ரன்) களத்தில் இருந்தனர்.

கைவசம் 8 விக்கெட் இருக்க, வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு இன்னும் 289 ரன் தேவைப்பட்ட நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. உணவு இடைவேளை வரை ஒரு பந்து கூட வீசப்படவில்லை. மழை இடைவிடாமல் பெய்ததால் இப்போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

5 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். டெஸ்ட் போட்டியில் அவருக்கு கிடைத்த முதல் ஆட்ட நாயகன் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.