பாகிஸ்தானில் 8 அணிகள் கலந்துகொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி போட்டிகள் மட்டும் பாதுகாப்பு காரணமாக துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதிபெறாமலேயே வெளியேறியது. தவிர, இந்திய அணியிடம் அவ்வணி தோல்வியடைந்ததும் அதிக விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து மூத்த தலைவர்கள் பலரும் கடுமையான விமர்சனத்தை அவ்வணி மீது வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் ஊடகங்கள் வினோதமான கூற்றுக்களை வெளியிட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று இந்தியா தங்கள் வீரர்களை திசைதிருப்ப சூனியம் செய்வதாகக் குற்றம்சாட்டியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகம் ஒன்று, அந்த நாட்டு அணியைத் தோற்கடிக்க இந்தியாவைச் சேர்ந்த 22 மந்திரவாதிகள் இணைந்து பாகிஸ்தான் வீரர்களுக்கு சூனியம் வைத்திருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. அதாவது ஒரு பாகிஸ்தான் வீரருக்கு இரண்டு மந்திரவாதிகள் என 11 பாகிஸ்தான் வீரர்களுக்கும் 22 மந்திரவாதிகளை அழைத்து துபாய் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் சூனியம் செய்ததாக அந்த ஊடகம் குற்றஞ்சாட்டி உள்ளது.
இந்த மந்திரவாதிகளை பாகிஸ்தானுக்கு அழைத்து வர முடியாது என்பதால்தான், போட்டியை துபாயில் நடத்த பிசிசிஐ வற்புறுத்தியதாக அந்த ஊடகம் தெரிவித்து இருக்கிறது. பாகிஸ்தான் ஊடகம் வைத்திருக்கும் இந்த குற்றச்சாட்டு சமூக வலைதளத்தில் சிரிப்பலையை ஏற்படுத்திருக்கிறது.