2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தயாரிப்பை தற்போதே அனைத்து அணிகளும் தொடங்கிவிட்டன. இந்திய அணியும் நடக்கவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே உலகக்கோப்பைக்கான முன்னோட்ட அணியை கிட்டத்தட்ட சீல் செய்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வீர்ர்களே 2027 உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் நிச்சயம் இடம்பிடிக்க போகிறார்கள், இதில் பெரிய மாற்றம் இருக்கப்போவதில்லை.. இந்த சூழலில் உலகக்கோப்பைக்கு முன் இந்திய ஒருநாள் அணியில் என்னென்ன பிரச்னைகள் இருக்கிறது.. அதை எப்படி இந்திய அணி சரி செய்யப்போகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்..
இந்திய வீரர்களுக்கோ, ரசிகர்களுக்கோ உலகக்கோப்பை என்றால் அது ஒருநாள் உலகக்கோப்பை தான்.. அதனால் தான் 1983-லிருந்து காத்துக்கிடந்த இந்திய ரசிகர்களுக்கு 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் தோல்வியும், 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் தோல்வியும் மறக்கமுடியாத வலியையும், ஆறாத காயத்தையும் கொடுத்துள்ளது. 2003 தோல்விக்கு பிறகு 2011-ல் இந்தியா கோப்பை வென்ற நிலையில், 2023 தோல்விக்கு பிறகு 2027-லும் கோப்பை வெல்லும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ரோகித் சர்மா, விராட் கோலியின் கடைசி உலக்க்கோப்பை என்பதும் இதற்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது.
அறிவிக்கப்பட்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில், கில், ரோகித், கோலி, ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல் உடன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் துருவ் ஜூரல் இருவரின் பெயரும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல ரவீந்திர ஜடேஜா, நிதிஷ்குமார் ரெட்டி, நமன் திர் போன்ற வீர்ர்கள் சேர்க்கப்பட்டிருப்பது பேட்டிங் ஆல்ரவுண்டர்கள் பக்கம் தேர்வுக்குழு திரும்பியிருப்பதை காட்டுகிறது. ஒரே ஒரு ஸ்பின்னராக குல்தீப் யாதவே அணியில் நீடிக்கிறார். பந்துவீச்சில் பும்ரா தவிர்த்து சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், அகிப் நபி மற்றும் கூடுதலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அணி உலகக்கோப்பையை மனதில் வைத்தே தேர்வுசெய்யப்பட்டுள்ளது. அதேநேரம் வீரர்களின் ஃபார்மும் முக்கிய பங்கெடுத்துள்ளன.
அனுபவம் வாய்ந்த வீர்ர்கள், இளம் வீர்ர்கள் என ஒரு சிறந்த கலவையாக அணி தென்பட்டாலும், டாப் 5 பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட இடது கை பேட்ஸ்மேன் இடம்பெறவில்லை. ஜெய்ஸ்வால் இருந்தாலும் அவர் பேக்கப்பிற்காக மட்டுமே எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது, இஷான் கிஷன் பெயரும் சேர்க்கப்படவில்லை. ஒருவேளை விக்கெட் சரிந்தால் ஜடேஜாவே முன்வரிசையில் விளையாட வேண்டியிருக்கும். இது 2019 உலகக்கோப்பை அரையிறுதி தோல்வியின் அச்சத்தை நியாபகப்படுத்துகிறது.
இதோடு விராட் கோலியை தவிர்த்து மற்ற எந்த வீர்ர்களும் ஆப்பிரிக்கா ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள், ரோகித் சர்மாவின் சராசரி 20க்கும் குறைவாகவே இருப்பது பெரிய கவலை. கில், ஸ்ரேயாஷ், ராகுல், கெய்க்வாட் என அனைவருமே புதியவர்கள். கோலி ஒருவரை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல் இந்தியாவிற்கு உருவாகலாம். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் சதமடித்த சஞ்சு சாம்சன் அணியின் பார்வையில் இருப்பதாக தெரியவில்லை.
வலுவான பேட்டிங் வரிசை இருந்தும் இவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது என்றால், பந்துவீச்சில் ஓட்டைகள் இரண்டு மடங்காகவே இருக்கிறது. பேட்டிங்கில் கோலியை போல, பவுலிங்கில் பும்ரா ஒருவர் மட்டுமே நம்பிக்கையாக இருக்கிறார். அவரும் அடிக்கடி காயம் ஆகக்கூடிய வீரராக இருப்பதால், அது இந்தியாவிற்கு பெரிய பின்னடைவாக மாறும் அபாயம் உள்ளது. பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார் தொடர்ந்து விக்கெட்டை வீழ்த்தக்கூடியவர்கள் அல்ல. சமீபத்தில் அணியில் புறக்கணிக்கப்பட்ட சிராஜ் எப்படி வரபோகிறார் என்பது கேள்விக்குறி. நிதிஷ் குமார் ரெட்டியும் காயமாகக் கூடியவர் என்பதால் அவருடைய இருப்பும் பெரிய கேள்விக்குறியாக தான் பார்க்கப்படுகிறது.
இப்படி எல்லாவற்றையும் கடந்து இந்திய அணியின் ஸ்குவாடில் நல்ல தேர்வாக அகிப் நபி மற்றும் நமன் திர் இருவரின் தேர்வு பார்க்கப்படுகிறது. அகிப் நபி ஸ்விங் செய்யக்கூடிய ஆடுகளங்களில் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் பந்துவீச்சை கொண்டுள்ளார், அவர் தற்போது ப்ரைம் ஃபார்மில் இருப்பது இந்தியாவிற்கு உலகக்கோப்பையில் பெரிய பலமாக அமையும். அதேபோல நல்ல பார்ட் டைம் ஸ்பின்னராக சமீபத்தில் அசத்திவரும் நமன் திர், கடைசியாக வந்து ஆட்டத்தையே மாற்றக்கூடிய அதிரடி பேட்டிங்கையும் கொண்டிருக்கிறார். அவரும் அணிக்கு தேவையான ஒருவராகவே இருக்கிறார்.
இந்தியாவின் ஒரே ஸ்பின் நம்பிக்கையான குல்தீப் யாதவை இதுவரை இந்தியா சரியாக பயன்படுத்தவில்லை என்பதே பலரின் ஆதங்கமாக இருந்துவருகிறது. அவரை எப்படி இந்தியா தயார் செய்யப்போகிறது என்பது பெரிய எதிர்ப்பார்ப்பாக உள்ளது. துருவ் ஜூரல் அவருடைய ஃபார்மால் அணியில் இடம்பிடித்துள்ளார். இது வெளிநாட்டு ஆடுகளங்களில் எந்தளவு சரியான தேர்வாக இருக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும்..
இப்படி இந்திய அணியில் இத்தனை ஓட்டைகளா என தோன்றினாலும், அனைத்தையும் சரிசெய்து கோப்பை வெல்லும் நாடாக இந்தியா மாறும், கோலி-ரோகித் கோப்பையுடன் விடைபெறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்..