ஆசிய கோப்பை வென்ற இந்திய மகளிர் அணி bcci
கிரிக்கெட்

2026 மகளிர் ஆசிய கோப்பை ஃபைனல்| 8வது முறையாக கோப்பை வென்று இந்தியா சாதனை!

2026 மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை பந்தாடி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய மகளிர் அணி.

Rishan Vengai

துபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசிய கோப்பை இறுதியில் இந்தியா இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 8வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. ஹர்மன்ப்ரீத் தலைமையில் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வெர்மா ஜோடி 129 ரன் தொடக்க கூட்டணியுடன் 183 ரன்கள் குவித்தது. இலங்கை 111 ரன்களுக்கு ஆல் அவுட்; ஸ்ரீ சரணி 4, தீப்தி சர்மா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 ஆசிய அணிகள் பங்கேற்று விளையாடிய 2026 மகளிர் ஆசிய கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் இந்தியா வென்று அசத்தியுள்ளது.

துபாய் சர்வதேச மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனாக களமிறங்கியை இலங்கையை எதிர்கொண்டது இந்தியா. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் பேட்டிங்கை தேர்வுசெய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வெர்மா இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி இலங்கை பந்துவீச்சாளர்களை சிதறடித்தனர்.

14 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என நாலாபுறமும் துவம்சம் செய்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கே 129 ரன்கள் குவித்து அசத்தியது. மந்தனா 59 ரன்களும், ஷபாலி 68 ரன்களும் அடிக்க 20 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது இந்திய அணி.

184 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இலங்கை அணி, இந்திய ஸ்பின்னர்களை சமாளிக்க முடியாமல் 111 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்து, 8வது முறையாக ஆசியக்கோப்பையை தட்டிச்சென்றது. அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்ரீ சரணி 4 விக்கெட்டுகள், தீப்தி சர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.