அனிருத் இசையமைத்த 'Feel the Thrill' பாடல் 2026 டி20 உலகக்கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பாடலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் கிரிக்கெட்டின் உணர்வை வெளிப்படுத்துகிறது. ஐசிசி வெளியீட்டில், அனிருத் கிரிக்கெட்டின் மகத்துவத்தைப் பற்றி பேசினார். 20 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டி பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது.
10வது டி20 உலகக்கோப்பை தொடரானது இலங்கை மற்றும் இந்தியாவில் வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடக்கவிருக்கிறது. 20 அணிகள் பங்குபெற்று விளையாடும் 55 போட்டிகள் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. 2024 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியானது நடப்பு சாம்பியனாக களம்காணவிருக்கிறது.
இந்தசூழலில் போட்டி தொடங்க இன்னும் 6 நாட்களே மீதமிருக்கும் நிலையில், 2026 டி20 உலகக்கோப்பை நிகழ்ச்சிக்கான புதிய பாடல் வெளியாகியுள்ளது. இந்தப்பாடலை நம்ம அனிருத் இசையமைத்துள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பைக்கான புதிய பாடலை அனிருத் இசையமைத்துள்ளார். ‘Feel the Thrill’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் பாடல் வரிகளை ஆங்கிலத்தில் ஹைசன்பெர்க், ஹிந்தியில் ரகீப் ஆலம் இருவரும் எழுதியுள்ளனர். இதன் வெளியீட்டு அறிவிப்பை ஐசிசி அவர்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
ஐசிசி உடன் கைக்கோர்த்து டி20 உலகக்கோப்பைக்கான புதிய பாடலை இசையமைத்திருக்கும் அனிருத், ”எனக்கு கிரிக்கெட் ஒரு சாதாரணமான போட்டி மட்டுமே கிடையாது. அது ஒரு உணர்வு. ஐசிசியின் ஆடவர் டி20 உலகக் கோப்பையில் பங்கு வகிப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். 20 நாடுகள், ஒரே சப்தம், நிஜமான திரில்லர் உடன் ஆட்டத்தைப் பார்க்கலாம்” என பேசியுள்ளார்.