நேபாள அணி, இங்கிலாந்துக்கு எதிராக கடைசி பந்துவரை த்ரில்லர் போட்டியை வழங்கியது. 185 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நேபாளம், கடைசி 3 ஓவரில் 46 ரன்கள் தேவை என்ற நிலையில், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் லுக் உட் வீசிய ஓவர்களில் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தியது. ஆனால் இறுதியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை இங்கிலாந்து கைப்பற்றியது.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலககோப்பையின் 10ஆவது சீசன் பிப்ரவரி 7ஆம் தேதியான நேற்று தொடங்கியது. மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரில், 20 அணிகளும் தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இத்தொடரில் நடப்பு சாம்பியனாக களம்கண்டிருக்கும் இந்திய அணி, பாகிஸ்தான், நமீபியா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகியா அணிகளுடன் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
முதல் நாளில் நடைபெற்ற 3 போட்டிகளும் த்ரில்லர் போட்டிகளாக இருந்த நிலையில், 2வது நாளில் நடைபெற்ற போட்டிகளும் சுவாரசியமான போட்டியாகவே அமைந்தன.
அந்தவகையில் டி20 உலகக்கோப்பை என்றால் இப்படிதான் இருக்கும் என்ற தரமான சம்பவத்தை நேபாள் அணி இங்கிலாந்துக்கு எதிராக படைத்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய போட்டியில் நேபாள் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சொந்த நாட்டில் நடப்பது போல நேபாள் அணியை ஆதரிக்க மைதானம் முழுக்க நேபாள ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர். அதற்கு தகுந்தார் போல் நேபாள் அணியும் ஒரு தரமான போட்டியை விருந்தாக படைத்தது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 184 ரன்கள் சேர்த்தது. கடைசியாக பேட்டிங் செய்ய வந்த வில் ஜாக்ஸ் 4 சிக்சர்களுடன் 18 பந்தில் 39 ரன்கள் அடித்து அணி நல்ல டோட்டலை குவிக்க உதவினார்.
185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய நேபாள அணி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. கடைசி 3 ஓவருக்கு 46 ரன்கள் தேவை என்ற நிலை இருக்க ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ஒரே ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்ட நேபாள் வீரர்கள் 22 ரன்கள் விளாசினர். தொடர்ந்து வந்த லுக் உட் வீசிய 19வது ஓவரிலும் 2 பவுண்டரிகள் உட்பட 14 ரன்களை விரட்டிய நேபாளம் வெற்றியின் பக்கமே இருந்தது.
4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு 200 ஸ்ட்ரைக்ரேட்டில் பேட்டிங் செய்த லோகேஷ் நம்பிக்கை நட்சத்திரமாக களத்தில் நிலைத்திருந்தார். இறுதி ஓவரை சாம்கரன் வீச எப்படியும் நேபாள் அணி பெரிய வரலாற்றை படைக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால் 4 பந்தில் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த சாம்கரன் அசத்தினார்.
கடைசி 2 பந்துக்கு 6 ரன்கள் அடித்தால் வெற்றி என ஆட்டம் மாற, யாருக்கு வேண்டுமானாலும் வெற்றி செல்லலாம் என்ற நிலையே இருந்தது. ஆனால் 5வது பந்தும் யார்க்கர் லெந்தாக வீசிய சாம்கரன் ஒரு ரன்னுக்கு மட்டுமே அனுமதித்தார். அந்த ரன்னையும் ஓடாமல் நின்ற லோகேஷ் தன்மீது நம்பிக்கை வைத்தார். ஆனால் 6வது பந்தையும் பிரிலியண்டாக லோ-ஃபுல் டாஸாக அவுட்சைடாக வீசிய சாம்கரன் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை உறுதிசெய்தார். கடைசிவரை இங்கிலாந்துக்கு மரண பயம் காட்டிய நேபாளம் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டது..