இந்தியா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஐசிசி கோப்பை வெல்லாவிட்டாலும், தலைசிறந்த கிரிக்கெட் அணியாகவே உலகம் முழுவதும் வலம் வந்துள்ளது.
2013 சாம்பியன்ஸ் டிராபி வென்றதற்கு பிறகான 12 வருட இடைவெளியில், இந்திய அணியானது 2014 டி20 உலகக்கோப்பை ஃபைனல், 2015 ஒருநாள் உலகக்கோப்பை செமி ஃபைனல், 2016 டி20 உலகக்கோப்பை செமி ஃபைனல், 2019 ஒருநாள் உலகக்கோப்பை செமி ஃபைனல், 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல், 2022 டி20 உலகக்கோப்பை செமி ஃபைனல், 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை ஃபைனல் என 8 ஐசிசி கோப்பைகளை இந்தியா தவறவிட்டுள்ளது.
இதில் பல இதயம் உடைக்கும் தருணங்களை இந்தியாவின் ரசிகர்கள் மட்டுமில்லாமல், இந்திய அணியின் வீரர்களும் அனுபவித்தனர். 2019 உலகக்கோப்பை தோல்வியின் போது மகேந்திர சிங் தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் கண்ணீர் விட்டதை யாராலும் மறக்க முடியாது. அதேபோல 2023 உலகக்கோப்பையை சொந்த மண்ணில் இழந்தபோது கேஎல் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி என அனைத்து இந்திய வீரர்களும் கடுமையான வேதனையை அனுபவித்ததையும் நம்மால் மறக்க முடியாது.
இப்படி தொடர்ச்சியாக 8 ஐசிசி கோப்பைகளை தவறவிட்ட இந்திய அணி, கடந்த 2 ஆண்டுகளில் 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி என இரண்டு கோப்பைகளை வென்று பட்ட காயத்திற்கெல்லாம் மருந்திட்டு வருகிறது.
இந்த சூழலில் இந்திய அணி 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் கடந்துவந்த பாதையை பார்க்கலாம்..
2025 சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய கிரிக்கெட் அணி பயணம் செய்யாது என்றும், துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தான் அனைத்து போட்டிகளையும் விளையாடப்போகிறது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அப்போதெல்லாம் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாததை மட்டுமே விமர்சனம் செய்தவர்கள், இந்திய அணி துபாய் மைதானத்தில் நடந்த ஒவ்வொரு போட்டியையும் வென்றபோது, ஒரே மைதானத்தில் ஆடுவதால் தான் இந்தியா வெற்றிபெறுகிறது என்ற குற்றச்சாட்டை வைத்தனர். இந்த குற்றச்சாட்டு இறுதிப்போட்டிவரை நீண்டது. இது அரையிறுதிப்போட்டியில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகளும் துபாய்க்கு வந்து காத்திருந்தபோது அதிகப்படியான விமர்சனத்தை பெற்றுத்தந்தது.
ஆனால் துபாய் ஆடுகளத்தில் இந்தியா விளையாடிய முதல் போட்டியிலேயே வங்கதேச அணிக்கு எதிராக தடுமாறிய பிறகுதான் வெற்றியை பெறமுடிந்தது. இந்த தடுமாற்றம் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியிலுமே இருந்தது. இதனால் இந்திய அணிக்கும் துபாய் ஆடுகளத்தில் விளையாடுவது கடினமான ஒன்றாக இருந்தது, காரணம் கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணி பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் மட்டுமே விளையாடியிருந்ததும் பெரிய பாதகமாகவே அமைந்திருந்தது.
இதையெல்லாம் கடந்து இந்தியா வெல்வதற்கு காரணமாக அமைந்தது விளையாடிய 11 வீரர்களுமே மேட்ச் வின்னராக மாறி ஜொலித்தது தான். இப்படி 11 வீரர்களுமே அணிக்காக தங்களுடைய வேலையை சிறப்பாக செய்தது 2011 உலகக்கோப்பைக்கு பிறகு 2025 சாம்பியன்ஸ் டிராபியில் மட்டுமே நடந்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி அணிக்கு வேண்டாம் என நினைக்கப்பட்ட இரண்டு வீரர்கள் தான், 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் திடீரென அணிக்குள் எடுத்துவரப்பட்டவர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும். அதுவரை பிளேயிங் 11 அணியில் இடம்பெற்றிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் இருவரும் ஆடும் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சிறந்த மாற்றமாக அணியில் இணைக்கப்பட்டனர்.
இந்திய அணி செய்த இந்த இரண்டு மாற்றமே, கோப்பையை வென்று கொடுத்துள்ளது. 2 அரைசதங்களுடன் 243 ரன்கள் அடித்த ஸ்ரேயாஸ் இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்த வீரராகவும், 3 போட்டிகளில் மட்டுமே விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராகவும் மாறி மகுடம் சூடியுள்ளனர்.
இவர்களை கடந்து வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷமி, சதமடித்த சுப்மன் கில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய குல்தீப் யாதவ், சதமடித்த விராட் கோலி மற்றும் அரைசதமடித்த ஸ்ரேயாஸ் ஐயர், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி, 79 ரன்கள் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர், 42 மற்றும் 44 ரன்கள் அடித்த அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதில் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய ரவிந்திர ஜடேஜா, 84 ரன்கள் அடித்த விராட் கோலி, 45, 42 ரன்கள் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல், இறுதிப்போட்டியில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், ரோகித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா என அனைத்து இந்திய வீரர்களும் தங்களுக்கு வழங்கிய வேலையை சரியாகவும், தரமாகவும் செய்து மேட்ச் வின்னர்களாக உருவெடுத்தனர்.
இதையெல்லாம் கடந்து பும்ரா இல்லாதது, இரண்டு அறுவை சிகிச்சைக்கு பிறகு களம்கண்ட முகமது ஷமி, இதற்கு முன் ஒருநாள் போட்டிகளிலேயே பெரிதும் விளையாடாத வருண் சக்கரவர்த்தி, 4 ஸ்பின்னர்கள் 1 ஃபாஸ்ட் பவுலர் என்ற ரிஸ்க்கியான மூவ் என இந்திய அணி பல்வேறு தைரியமான முடிவுகளையும் எடுத்தபின்னரே வெற்றிக்கனியை ருசித்துள்ளது.
கேப்டனாக ரோகித் சர்மா சிறந்த கேப்டன்சியை செய்ததை ஒவ்வொரு போட்டியிலும் நம்மால் காண முடிந்தது, ஸ்பின்னர்களை நன்றாக விளையாடும் டேரில் மிட்செல்லுக்கு எதிராகவும், கேன் வில்லியம்சனுக்கு எதிரான ஈசி சிங்கிளை கட்செய்யும் விதமாகவும் தரமான ஃபீல்ட் செட்டிங்கை பயன்படுத்தினார். அதேபோல பவுலிங் ரொட்டேஷன், ரன்கள் வேகமாக கசியும்போது எந்த பவுலரை எடுத்துவர வேண்டும் என ஒரு கேப்டனாகவும் ரோகித் சர்மா மிளிர்ந்து விளங்கினார்.
தென்னாப்பிரிக்காவிற்காக கோப்பை வெல்லமுடியாத பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், ஒரு பயிற்சியாளராக கோப்பையை வென்று சாதித்துள்ளார். பார்டர் கவாஸ்கர் டிராபியில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட கவுதம் கம்பீர், பயிற்சியாளராக முதல் ஐசிசி கோப்பையை வென்று விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அணி வீரர்கள் தொடங்கி, பயிற்சியாளர்கள், துணை பயிற்சியாளர்கள், ஸ்டாஃப்கள் என அனைவரும் தங்களுடைய வேலையை சரியாக செய்ததன் பலனே இந்தியா கோப்பையை வென்று சம்பியானாக மகுடம் சூடியுள்ளது.
2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என வரிசையாக வென்ற இந்திய கேப்டன் தோனியை தொடர்ந்து, 2024 டி20 உலகக்கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி என வென்றுள்ள ரோகித் சர்மா கேப்டனாக 2027 ஒருநாள் உலகக்கோப்பையை குறிவைத்துள்ளார்.
ரோ-கோ என்ற ரோகித் சர்மா மற்றும் கோலி கூட்டணி 2027 உலகக்கோப்பையையும் வென்று கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சத்தில் ஓய்வுபெற வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கும் இருக்கிறது.
Come On INDIA, உலக கிரிக்கெட்டை ஆள இதுவே சரியான தருணம்!