உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்வியால் டென்ஷனானார் கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி
ஐசிசி பெண்கள் உலக கோப்பை நாளை முதல் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. அங்கு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மித்தாலியிடம், உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியால் சற்று பொறுமையை இழந்த மித்தாலி, "ஏன் பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் அனைவரிடமும் இதே கேள்வியை கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். இந்த கேள்வியை தொடர்ந்து எதிர்க்கொண்டு நான் மிகவும் சோர்ந்து விட்டேன். ஏன் ஒரு கிரிக்கெட் வீரரிடம், உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீராங்கனை யார் என்ற கேள்வியை கேட்க மறுக்கிறீர்கள். அவர்களிடம் சென்று முதலில் இந்த கேள்வியை கேளுங்கள்" என்றார். மித்தாலியின் இந்த அதிரடியான பதிலை எதிர்ப்பார்க்காத செய்தியாளர் பதில் ஏதும் கூறாமல் செய்வதறியாமல் அமர்ந்திருந்தார். மித்தாலியின் இந்த பதிலுக்கு பல தரப்பினரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.