டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது அரையிறுதி ஆட்டங்களுக்கு மாற்றுநாள் வைக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு முனைப்பு காண்பித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தன்னுடைய கோரிக்கையை ஐசிசியிடம் கொண்டு சென்றுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் நாக் அவுட் சுற்றான அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து மோதிய ஆட்டம் பலத்த மழையால் கைவிடப்பட்டது. அதிக புள்ளிகள் அடிப்படையில் இந்தியா இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது ஆஸ்திரேலியா.
மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்துக்கு பதிலாக மாற்று நாள் ஆட்டம் வைக்கப்படவில்லை. இறுதி ஆட்டத்துக்கு மட்டுமே மாற்றுநாள் வைப்பது வழக்கம் என ஐசிசி கூறி விட்டது. இதுதொடா்பாக இங்கிலாந்து மகளிா் அணி கேப்டன் ஹீதா் நைட் உள்பட பலா் அதிருப்தி தெரிவித்தனா். ஐசிசி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஆடவா் டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபா்-நவம்பா் மாதங்களில் நடைபெறுகிறது. அரையிறுதி ஆட்டங்கள் நவ. 11 சிட்னி, நவ.12 அடிலெய்ட் நடைபெறுகிறது. இறுதி ஆட்டம் நவ. 15-இல் மெல்போா்னில் நடைபெறுகிறது. இறுதி ஆட்டத்தின்போது மழைபெய்தால் வழக்கம் போல் மாற்று நாள் உள்ளது. போட்டி அமைப்பாளா்கள் அரையிறுதிச் சுற்றுக்கும் மாற்று நாள் வைக்க வேண்டும் என முனைப்பு காட்டி வருகின்றனா். கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவா் கெவின் ராபா்ட்ஸ் இந்த ஆண்டு இறுதியில் ஐசிசி கிரிக்கெட் கமிட்டி குழுவின் போது இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.