விளையாட்டு

தோனியின் ஓய்வு முடிவில் கொரோனா பரவலுக்கு பெரும் பங்கு - யஸ்வேந்திர சாஹல்

webteam

தோனியின் ஓய்வு முடிவில், கொரோனா வைரஸ் பரவலுக்கு பெரும் பங்கு இருப்பதாக யஸ்வேந்திர சாஹல் கூறியுள்ளார்.

அண்மையில் தோனி தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அதற்கு திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சாளர் யஸ்வேந்திர சாஹல் தோனியின் ஓய்வு முடிவில், கொரோனாத் தொற்றுக்கு பெரும் பங்கு இருப்பதாகக் கூறியுள்ளார்.

ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் “ தோனி ஓய்வு முடிவு எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது. கொரோனாத் தொற்றால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். ஏனெனில் இந்த ஆண்டு நடக்க இருந்த டி20 உலகக் கோப்பை கொரோனா பரவல் காரணமாக 2022-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இல்லையென்றால் அதில் தோனி விளையாட வாய்ப்பு இருந்திருக்கும். அவர் இப்போதும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாட தகுதியான நபராக இருக்கிறார். நானும் அவர் விளையாட வேண்டும் என்றே நினைக்கிறேன்.

ஏனெனில் நானும் குல்தீப்பும் கிரிக்கெட்டில் வளர்ந்ததற்கு தோனி முக்கிய காரணமாவார். எங்களுக்கு அவர் நிறைய உதவிகளைச் செய்துள்ளார். தோனி மைதானத்தில் இருந்தால் எங்களது 50 சதவீத பணிகள் முடிந்து விட்டது என்று அர்த்தம். காரணம் எந்த ஒரு மைதானத்தின் தன்மையையும், அவர் முன்பே கணித்துச் சொல்லி விடுவார். அவர் இல்லை என்றால் நாங்கள் 2 ஓவர் பந்துகளை வீசிய பின்னர்தான்  மைதானத்தின் தன்மையை தெரிந்து கொள்ள முடியும்” என்றார்.

அவருக்கு ஃபேர்வெல் போட்டி நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்தான கேள்வியை அவரிடம் முன்வைத்த போது “ அந்த முடிவை பிசிசிஐ தான் எடுக்க வேண்டும். தோனி அதை விரும்புகிறாரா என்று தெரிந்து கொள்ளவும் வேண்டும்” என்று கூறினார்.