விளையாட்டு

ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் : களத்தில் சொதப்பிய சோகம்..!

webteam

2019ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் களத்தில் சொதப்பிய வீரர்களை பார்ப்போம்.

இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் ஜெய்தேவ் உனாட்கட் மற்றும் வருண் சக்கரவர்த்தி. இந்திய இடதுகை வேகபந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாட்கட்டை ரூபாய் 8.4 கோடி ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஆனால் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் அவர் பெரிதாக விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. அத்துடன் ரன்களையும் வாரிக்கொடுத்து சொதப்பினார். இதேபோன்று பஞ்சாப் அணிக்காக 8.4 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி பெரிதாக விளையாடவில்லை. அவர் விளையாடிய ஒரு போட்டியிலும் அவரால் சரியாக செயல்பட முடியவில்லை. பின்னர் காயம் காரணமாக அணியிலிருந்து விலகிக்கொண்டார். 

கடந்த 2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் சிறந்த வீரராக விளையாடிய கார்லஸ் பிராத்வேய்ட், இந்த ஏலத்தில் கொல்கத்தா அணிக்காக 5 கோடி ரூபாய்க்கு ஏலமெடுக்கப்பட்டார். சில போட்டிகளில் மட்டுமே விளையாடி அவருக்கு பெரிதாக வாய்ப்பும் வழங்கப்படவில்லை. கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தவும் இல்லை. இவரைப் போன்றே சென்னை அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா, 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால் இவர் ஒரே ஒரு போட்டியில் மட்டும் மும்பைக்கு எதிராக களமிறக்கப்பட்டு, பின்னர் அணியில் சேர்க்கப்படவே இல்லை. இதேபோன்று டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரூ.5 கோடிக்கு எடுக்கப்பட்ட ராஜேஷ் படேல், பெங்களூர் ரூ.5 கோடிக்கு எடுக்கப்பட்ட ஷிவன் டியூப் ஆகியோரும் ஐபிஎல் தொடரில் பயனற்றுபோயினர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக சிம்ரன் ஹெட்மெயர் பெங்களூர் அணி சார்பில் ரூ.4.20 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இருவருக்கு போதிய வாய்ப்புகள் கொடுப்பட்டும் தொடர்ந்து சொதப்பினார். இதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஓரே ஒரு போட்டியில் மட்டும் அரை சதம் அடித்தார். இவர் களத்தில் எதையும் சாதிக்கவில்லை. இவருடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இதே ரூ.4.20 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட நிக்கோலஸ் பூரான் சற்று பரவாயில்லை என்று கூறலாம். பஞ்சாப் அணியில் விளையாடிய இவர் பாதிக்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், விளையாடிய சில போட்டிகளில் ஓரளவு ரன்களை சேர்த்தார். இவர்களை தவிர ரூ.2.40 கோடிக்கு ராஜஸ்தான் அணியில் எடுக்கப்பட்ட வருன் ஆரோன் மற்றும் ரூ.2 கோடிக்கு டெல்லி அணியில் எடுக்கப்பட்ட ஹனுமா விஹாரி ஆகியோரும் களத்தில் ஜொலிக்கவில்லை.