விளையாட்டு

காமன்வெல்த்: கடைசி நாளில் பதக்கங்களை தட்டித் தூக்கிய இந்தியா- ரவுண்ட் அப்

webteam

கமான்வெல்த் போட்டியின் கடைசி நாளில் இந்தியா 5 தங்க பதங்கங்களை வென்று அசத்தியது.

72 நாடுகள் பங்கேற்ற 22-வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று முடிந்தது. பளுதூக்குதல், குத்துச் சண்டை, மல்யுத்தம் ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டை நடத்தினர். இறுதி நாளான நேற்று இந்திய வீரர் வீராங்கனைகள் 5 தங்கங்களை வென்று அசத்தினர். கடைசி நாளில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷ்யா சென் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

மகளிர் பேட்மிண்டனில் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து, கனடா வீராங்கனை மிஷெல் லி-யை 21-15, 21-13 என்ற புள்ளிகள் கணக்கில் எளிதில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். இதன் மூலம் சிந்து காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ச்சியாக 3 முறை பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் முதல் முறையாக காமன்வெல்த்தில் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்ஷ்யா சென், மலேசிய வீரர் சி யாங்-கை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டி வந்தார்.

பேட்மிண்டன் இரட்டையரிலும் இந்திய அணி தங்கம் வென்றது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட ரங்கிரெட்டி, சிராஜ் ஷெட்டி இணை நேர் செட் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சரத் கமல் தங்கம் வென்றார். இங்கிலாந்தின் லியாம் பிட்ச் ஃபோர்டை அவர் 4-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.

ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி வெள்ளி பதக்கம் வென்றது. இறுதிச் சுற்றில், இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் மோதியது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலியா அணியினர், ஒருகோல் கூட அடிக்க விடாமல் தடுத்தனர். இறுதியில், 0-7 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி தோல்வியை சந்தித்து. இதனால் தங்கத்தை இழந்த இந்திய ஹாக்கி அணி, வெள்ளி பதக்கம் பெற்று ஆறுதல் அடைந்தது.

காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 61 பதக்கங்கள் பெற்று புள்ளிப் பட்டியலில் 4ஆம் இடம் பிடித்தது. 67 தங்கப் பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை இங்கிலாந்தும் 3 வது இடத்தை கனடாவும் பிடித்தன.