விளையாட்டு

"நான் சொன்னது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது"- ஷோயப் அக்தர்

jagadeesh

டேனிஷ் கனேரியா விவகாரத்தில் தான் சொல்ல வந்தது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுவிட்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

டேனிஷ் கனேரியா ஹிந்து என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரா்கள் சிலா், அவருடன் ஒன்றாக அமா்ந்து சாப்பிட கூட மாட்டார்கள் என்று ஷோயப் அக்தா் கடந்த வாரியம் கூறியிருந்த கருத்து கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் விமர்சித்திருந்தனர். இதனையடுத்து, "உண்மையை உலகுக்கு கூறியதற்கு நன்றி" என டேனிஷ் கனேரியா தெரிவித்திருந்தார்.

இது சர்ச்சையான சூழ்நிலையில் ஷோயப் அக்தர் தற்போது விளக்கமளித்துள்ளார் அதில் " டேனிஷ் கனேரியா ஹிந்து மதத்தைச் சோ்ந்தவா் என்பதால் ஒரு சில வீரா்கள் மட்டுமே புறக்கணித்தனா். ஒட்டுமொத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியையும் நான் குற்றம்சாட்டவில்லை. எனது அறிக்கையால் ஏற்பட்ட குழப்பத்தை அறிந்தேன். எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. பாகிஸ்தான் அணியில் மட்டுமல்ல; உலகின் பல்வேறு நாடுகளிலும் ஒரு சில விளையாட்டு வீரா்கள் இன ரீதியிலான கருத்துகளை தெரிவிப்பதுண்டு. பாகிஸ்தானில் மத ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதில்லை. மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதால்தான் கனேரியாவுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது" என்றார் அவர்.