விளையாட்டு

போன வருடம் கமெண்ட்ரி.. இப்போ தொடர் நாயகன்! சாம் கர்ரன் சொன்ன அந்த வார்த்தை!!

webteam

2021ல் அணியில் இடம்பெறாமல் கமெண்டரி செய்த சாம் கர்ரன், தற்போது இங்கிலாந்து அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தது மட்டுமில்லாமல் தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றுள்ளார்.

பந்துவீச்சில் மிரட்டிய கடைக்குட்டி சிங்கம்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கைகளில் இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பை தவழ்வதற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் சாம் கர்ரன் திகழ்ந்துள்ளார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இறுதிப் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு வெறும் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். மிகவும் அபாயகரமாக கருதப்பட்ட பாபர் அசாம் - ரிஸ்வான் பார்ட்னர்ஷிப்பை அவரே உடைத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த சாம் கர்ரனை சென்னை ரசிகர்கள் செல்லமாக கடைக்குட்டி சிங்கம் என்று அழைப்பார்கள். அந்த கடைக்குட்டி சிங்கத்தின் அசத்தல் பந்துவீச்சில்தான் இங்கிலாந்து அணிக்கு கோப்பை நனவாகியுள்ளது.

இரண்டாவது முறை கோப்பை வென்ற இங்கிலாந்து!

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றையப் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.

சாம் கர்ரன் சொன்ன அந்த வார்த்தை!

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதினை வென்ற பின்னர் பேசிய சாம் கர்ரன், “இந்த விருது எனக்கு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. உண்மையில் இந்த விருது பென் ஸ்டோக்ஸ்க்கு தான் சென்றிருக்க வேண்டும். இங்கிலாந்து அணிக்காக இதுபோன்று பல தருணங்களை அவர் தந்திருக்கிறார். இந்த விருதின் ரியல் ஓனர் அவர்தான்” என்று அவர் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் அவர் பேசுகையில், “எனது திட்டம் எளிமையானதுதான். ஆடுகளத்தின் காற்றின் திசைக்கு ஏற்ப பந்துவீச வேண்டும். அதனை சிறப்பாக செயல்படுத்தினேன். பாகிஸ்தான் அணியும் மிகச்சிறப்பாக பந்துவீசியது. அவர்கள் எங்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்கள். ஆனால், எங்களது அனுபவம் வாய்ந்த பென் ஸ்டோக்ஸ் இருந்தார். அவர் இங்கிலாந்து அணிக்காக இதுபோன்ற பெரிய விஷயங்களை செய்து கொடுத்திருக்கிறார். அவர் சிறந்த வீரர்” என்று மேலும் ஸ்டோக்ஸை புகழ்ந்தார்.

கம்பேக் கொடுத்த சாம் கர்ரன்

முன்னதாக, 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் சாம் கர்ரன் இடம்பெறவில்லை. கடந்த உலகக் கோப்பை தொடரின் போது கமெண்ட்ரியாக தன்னுடைய செயல்பாடை மேற்கொண்டார். ஆனால், நடப்பு தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்றுள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான அரையிறுப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 42 ரன்கள் விட்டுக் கொடுத்த நிலையில், இறுதிப் போட்டியில் கம்பேக் கொடுத்து 3 விக்கெட் சாய்த்து 12 மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 13 விக்கெட்டுகளை சாம் கர்ரன் சாய்த்துள்ளார்.

சாம் கர்ரன் தான் முதல் வீரர்!

2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வென்ற அனைவருமே பேட்ஸ்மேன்கள் தான். ஷாகித் அப்ரிதி, தில்ஷன், கெவின் பீட்டர்சன், ஷேன் வாட்சன், விராட் கோலி, டேவிட் வார்னர் ஆகியோர் 2021 வரை ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள். இந்த வரிசையில் சாம் கர்ரன் முதல் முறையாக வேகப்பந்துவீச்சாளராக தடம் பதித்துள்ளார்.