விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் 3 சதங்கள் அடித்து முண்ரோ சாதனை

rajakannan

நியூசிலாந்து வீரர் முண்ரோ டி20 கிரிக்கெட் வரலாற்றில் மூன்று சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நியூசிலாந்தின் பே ஓவல் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. கொலின் முண்ரோ அதிரடியாக விளையாடி 53 பந்துகளில் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதேபோல், குப்தில் 63(38) ரன்கள் எடுத்தார். 

244 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணி 16.3 ஓவரில் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. ஆண்ட்ரே ப்ளெட்சர் மட்டும் 46(32) ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கெயில் டக் அவுட் ஆனார். நியூசிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இரண்டாவது போட்டி மழையால் ரத்தானது. மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரையும் நியூசிலாந்து அணி வென்றிருந்தது. 

இந்தப் போட்டியில் அடித்தது முண்ரோவுக்கு மூன்றாவது சதம் ஆகும். சர்வதேச டி20 போட்டிகளில் மூன்று சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை முண்ரோ படைத்துள்ளார். முண்ரோ ஏற்கனவே இந்தியா, வங்கதேசம் அணிக்களுக்கு எதிரான சதம் அடித்துள்ளார். இந்த டி20 தொடரில் 53(37), 66(23), 104(53) ரன்கள் அவர் குவித்துள்ளார். மெக்கல்லம், கெயில், ரோகித் சர்மா ஆகியோர் இரண்டு சதங்கள் அடித்துள்ளனர். மேலும், 2018-ம் ஆண்டின் முதல் பவுண்டரி, முதல் சிக்ஸ், முதல் அரைசதம், முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை முண்ரோ பெற்றுள்ளார்.

இந்தப்போட்டியில் நியூசிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே அதிகபட்ச வித்தியாசம் ஆகும். இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியை இங்கிலாந்து 116 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.