தங்கம் வென்ற ஏ.வி.மேஹா
தங்கம் வென்ற ஏ.வி.மேஹா  PT web
விளையாட்டு

தேசிய அளவிலான ஸ்கேட்டிங்கில் தங்கப் பதக்கம் வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த கோவை சிறுமி!

Prakash J

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2023, சண்டிகரில் உள்ள மொகாலியில் கடந்த மாதம் ஏப்ரல் 27ஆம் தொடங்கியது. இது, கடந்த 2ஆம் தேதிவரை நடைபெற்றது. ரோலர் ஸ்கேட்டிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவால் நடத்தப்பட்ட இந்த மெகா சாம்பியன்ஷிப்பில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 3000க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

இதில், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஏ.வி.மேஹா என்ற சிறுமி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த சாம்பியன்ஷிப்பில் 7 முதல் 9 வயது பிரிவில் கலந்துகொண்ட ஏ.வி.மேஹா, ரிங்க் 1 லேப் போட்டியில் முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கத்தையும், ரோடு 1 லேப் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இந்த இரண்டு இறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெறுவதற்கு முன்னர் ஏ.வி.மேஹா, ப்ரீ குவார்ட்டர், குவார்ட்டர், செமி ஃபைனல் ஆகிய சுற்றுகளிலும் பங்குபெற்று அதிலும் வெற்றிபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் தமிழகத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். அதில், தமிழகம் அளவில் இந்த வயதில் இத்தகைய சாதனையைப் படைத்ததற்காக ஏ.வி.மேஹாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

போட்டியில் ஏ.வி.மேஹா வெற்றி பெற்றது குறித்து அவரது பயிற்சியாளர் ராகுல் பாண்டியன், “இந்த சாம்பியன்ஷிப்பில் வெல்வது எளிதானது அல்ல. அவருக்கு என் வாழ்த்துகள். இதுபோல் இன்னும் பல பதக்கங்களை அவர் வாங்க வேண்டும். அவர், கடந்த ஆண்டு முதல் என்னிடம் பயிற்சி பெற்று வருகிறார். நான் தேசிய அளவில் பல பதக்கங்களைப் பெற்று உள்ளேன். என்னிடம் நிறைய வீரர் மற்றும் வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

பயிற்சியாளர் ராகுல் பாண்டியனுடன் மேஹா

அதில் ஏ.வி.மேஹாவும் ஒருவர். அவர் தொடர்ந்து ஆர்வத்துடன் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டும் ராஜஸ்தானில் இதுபோன்று தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய பதக்கங்களை வென்றிருக்கிறார். நாட்டுக்காக பதக்கம் வாங்கித் தருவதை லட்சியமாகக் கொண்டுள்ளார். இந்த ஆண்டு பெல்சியமில் நடக்கும் ஓபன் சர்வதேச போட்டிக்காக கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்” என்றார்.

இதுகுறித்து ஏ.வி.மேஹாவின் பெற்றோர், “எங்கள் மகள், கோயம்புத்தூரில் உள்ள ராகுல்ஸ் அகாடமி ஆஃப் ரோலர் ஸ்கேட்டிங்கில் கடந்த ஆண்டு முதல் பயிற்சி பெற்று வருகிறார். அவர் தரும் பயிற்சியினாலேயே எங்கள் மகள் இந்த அளவுக்கு வர முடிந்தது. எங்கள் மகள் விடியற்காலை மற்றும் மாலை என இருவேளையும் பயிற்சிகளில் கலந்துகொண்டதாலேயே இத்தகைய பரிசை வெல்ல முடிந்தது. இதற்கு முழுக்க முழுக்க பயிற்சியாளர் ராகுல் பாண்டியனே காரணம். அவர் மூலம், எங்கள் மகள் இன்னும் நிறைய பதக்கங்களை வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.