விளையாட்டு

கொல்கத்தாவிடம் மீண்டும் வீழ்ந்தது பெங்களூரு!

கொல்கத்தாவிடம் மீண்டும் வீழ்ந்தது பெங்களூரு!

webteam

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மீண்டும் தோல்வியை தழுவியது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் 29-வது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில் பெங்களுரு - கொல்கத்தா அணிகள் மோதின.  பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

பெங்களூரு அணியில் காய்ச்சல் காரணமாக டிவில்லியர்ஸ் ஆடவில்லை. அவருக்கு பதிலாக டிம் சவுதி சேர்க்கப்பட்டிருந்தார். மேலும் வாஷிங்டன் சுந்தர், பவன் நேகி, கோரி ஆண்டர்சன் நீக்கப்பட்டு முருகன் அஸ்வின், மனன் வோரா, பிரண்டன் மெக்கலம் சேர்க்கப்பட்டிருந்தனர். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டி காக்கும் மெக்கலமும் சிறப்பானத் தொடக்கத்தை தந்தனர். டிகாக்,  29 ரன்கள் எடுத்திருந்த போது, குல்தீப் சுழலில் சிக்கி பெவிலியன் திரும்பினார். மெக்கலம் 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்த போது ஆண்ட்ரூ ரஸல் பந்தில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேனார். அடுத்த பந்தில் மனன் வோராவை போல்டாக்கினார் ரஸல்.  மன்தீப் சிங் 19 ரன்கள் எடுத்திருந்த போது அவர் விக்கெட்டையும் ரஸல் சாய்த்தார்.

ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் விராத் கோலி அதிரடியாக விளாசினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். கிராண்ட் ஹோம் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா. தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின்னும் சுனில் நரேனும் சிறப்பான ஆடினர். 6.3-வது ஓவரில் கொல்கத்தா அணி 55 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் சிறிது நேரம் ஆட்டம் தடைப்பட்டது. ஆட்டம் மீண்டும் தொடங்கியதும் முருகன் அஸ்வின் சுழலில் சுனில் நரேன் கேட்ச் ஆனார். அவர் 27 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து நிதிஷ் ராணா, கிறிஸ் லின்னுடன் இணைந்தார்.

இருவரும் நிதானமாக ஆடிக்கொண்டிருந்தபோது, முதுகு வலி காரணமாக ராணா வெளியேறினார். அவர் 15 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் 23 ரன்கள் எடுத்து வெளியேறினாலும் கிறிஸ் லின் கடைசி வரை நின்று அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 52 பந்தில் 62 ரன்கள் சேர்த்தார். இதனால் 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. 

கடைசி வரை ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் குவித்த கிறிஸ் லின் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த இரு அணிகளும் கடந்த 8-ம் தேதி மோதிய லீக் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது கொல்கத்தா. இப்போது மீண்டும் பெங்களூரை வீழ்த்தியுள்ளது.