விளையாட்டு

‘தோனி..தோனி..’ டூ ‘ராகுல்.. ராகுல்’ - விராட் பார்வையால் மாறிய முழக்கம்

‘தோனி..தோனி..’ டூ ‘ராகுல்.. ராகுல்’ - விராட் பார்வையால் மாறிய முழக்கம்

webteam

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் நீண்ட காலமாகவே விக்கெட் கீப்பராக கோலோச்சி வந்தவர் தோனி. தற்போது, இந்திய அணிக்கான அடுத்த விக்கெட் கீப்பரை உருவாக்கும் முயற்சியில் இந்திய அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதனால், தொடர்ச்சியாக ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக பெரிய அளவில் சோபிக்கவில்லை. குறிப்பிடும்படியான தவறுகளை செய்து வந்தார்.

களத்தில் ரிஷப் தவறுகள் செய்யும் போதெல்லாம், மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் தோனி.. தோனி என்று முழக்கமிட்டனர். இப்படி, செய்வது ரிஷப்பை அவமானப்படுத்துவதாகும் என பல முன்னாள் வீரர்களும் கண்டித்தனர். கேப்டன் விராட் கோலியும், அதுபோல் முழக்கமிடும் தருணங்களில் ரசிகர்களை பார்த்து வேண்டாம் என சைகை செய்வார்.

இந்நிலையில், நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், கடைசி இரண்டு போட்டிகளுக்கு விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் செயல்பட்டார். இவர் ரிஷப் பண்ட்டினை காட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டார். பெரிய அளவில் தவறுகள் எதுவும் செய்யவில்லை என பல ரசிகர்களும் பாராட்டியுள்ளனர். அற்புதமான ஸ்டம்பிங் ஒன்றினையும் செய்தார்.

இருந்தும், பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் குல்தீப் யாதவ் வீசிய ஓவரில், ஸ்டீவ் ஸ்மித் பேட்டில் பந்து பட்டு கீப்பருக்கு பின்னால் சென்றது. அதனை விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் பிடிப்பது சிரமம்தான். இருப்பினும், அவர் பந்தினை விட்டு விட்டதாகக் கூறி மைதானத்தில் இருந்த ஒரு தரப்பு ரசிகர்கள் தோனி தோனி என முழக்கமிட்டனர். உடனே ரசிகர்களை நோக்கி விராட் கோலி பார்த்தார். உடனடியாக, முழக்கத்தை ராகுல்.. ராகுல் என ரசிகர்கள் மாற்றினர்.

கே.எல்.ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக செயல்பட வேண்டும் என்று பலரும் தற்போது வலியுறுத்தி வருகின்றனர். நேற்றைய போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் விராட் கோலியும், இந்தக் கருத்தினை தெரிவித்தார்.