விளையாட்டு

"வலைப்பயிற்சியில் சிக்ஸர்களை பறக்கவிட்ட புஜாரா!" - ஆனந்தக் கண்ணீரில் சிஎஸ்கே ரசிகர்கள்

"வலைப்பயிற்சியில் சிக்ஸர்களை பறக்கவிட்ட புஜாரா!" - ஆனந்தக் கண்ணீரில் சிஎஸ்கே ரசிகர்கள்

jagadeesh

சிஎஸ்கே அணியின் வலைப்பயிற்சியின்போது தாறுமாறாக சிக்ஸர்களை பறக்கவிட்ட புஜாராவின் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய டெஸ்ட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனான புஜாரா, முதல்முறையாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார். இதற்காக மும்பையில் அணியினருடன் அவர் பயிற்சியை தொடங்கியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த முக்கியத் தொடக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா, டிரேடிங் முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார். புஜாராவுடன், ராபின் உத்தப்பா, கே கவுதம் ஆகியோரும் மும்பையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து புஜாரா கூறுகையில், "களத்தில் நிற்பதை மகிழ்ச்சியாக உணர்கிறேன். மஞ்சள் ஜெர்ஸி அணிந்து விளையாடும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்’’ என்றார். இந்த முகாமில் சிஎஸ்கே கேப்டன் தோனி, ருதுராஜ், ராயுடு, புஜாரா உள்ளிட்டவர்களை பார்க்க முடிந்தது. தனது பிட்னசை நிரூபித்து அணியில் இணைந்துள்ள ரவீந்திர ஜடேஜா, 7 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட உள்ளார். இதையடுத்து அவரும் பயிற்சி முகாம்களில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் வலைப்பயிற்சியின்போது புஜாரா பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் புஜாரா எப்படி டி20 தொடரில் விளையாடுவார் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருந்தது. இப்போது புஜாரா பந்துகளை சிக்ஸர்களுக்கு தெறிக்கவிடும் வீடியோ சிஎஸ்கே ரசிகர்களின் கண்களில் ஆனந்த கண்ணீரை வர வைத்துள்ளது.