குகேஷ் - பிரக்ஞானந்தா web
செஸ்

டாடா ஸ்டீல் செஸ் 2025 | டைட்டில் வென்ற பிரக்ஞானந்தா.. தோற்றப்பின் உடைந்து அழுத குகேஷ்!

டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் உலக செஸ் சாம்பியன் குகேஷை வீழ்த்தி டைட்டில் வென்றார் இந்தியாவின் மற்றொரு கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா.

Rishan Vengai

செஸ் உலகின் விம்பிள்டன் என்று அழைக்கப்படும் டாடா ஸ்டீல் மாஸ்டர் தொடரானது நெதர்லாந்தில் நடைபெற்றது. இந்த தொடரில் உலகின் டாப் 14 வீரர்கள் ரவுண்ட் ராபின் முறைப்படி தங்களுக்குள் 13 சுற்றுகளில் மோதினர். இதில் தமிழக கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் இருவரும் சிறப்பாக செயல்பட்டு, ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றனர்.

tata steel chess 2025

இதனை தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியானது டை பிரேக் முறையில் பிரக்ஞானந்தாவுக்கும் குகேஷுக்கும் இடையே நடைபெற்றது.

தோற்றபிறகு உடைந்து அழுத குகேஷ்..

நெதர்லாந்தின் Wijk aan Zee-ல் நடைபெற்ற டாடா ஸ்டீல் செஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இரண்டு இந்திய கிராண்ட்மாஸ்டர்களான பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் இருவரும் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் சிறப்பாக செயல்பட்டனர்.

இதில் வெள்ளை நிற காய்களை வைத்து விளையாடிய குகேஷ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் குகேஷ் சமன் அடைந்து இருந்தாலே அவர் சாம்பியன் பட்டத்தை வென்று இருப்பார். எனினும் பிரக்ஞானந்தா இரண்டாவது டை பிரேக்கர் ஆட்டத்தில் அபாரமாக விளையாடி குகேஷ்க்கு அதிர்ச்சி அளித்தார்.

இரண்டாவது சுற்றில் சமனிற்கு செல்லாமல் வெற்றிக்கு முயற்சித்ததால், பிரக்ஞானந்தா கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வெற்றியை தட்டிச்சென்றார். தோல்வியின் போது உடைந்து போன குகேஷ் கண்ணீர் சிந்தினார். உலக சாம்பியனாக பிறகு விளையாடிய முதல் தொடரிலேயே குகேஷ் தோல்வியை தழுவினார்.

2006-ம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்த் வென்றதற்கு பிறகு இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார்.