உலக செஸ் ப்ளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் ஓப்பன் பிரிவில் மேக்னஸ் கார்ல்சனும், இயன் நெப்போம்நியாட்சியும் கோப்பையை பகிர்ந்துகொள்கிறார்கள். பெண்கள் பிரிவில் சீனாவின் ஜூ வெஞ்சுன் கோப்பை வென்றிருக்கிறார்.
உலக செஸ் ப்ளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நியூயார்க் நகரில் டிசம்பர் 30,31 தேதிகளில் நடைபெற்றது. முதல் சுற்றில் அதிக புள்ளிகள் பெற்றவர்கள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினார்கள். ஓப்பன் பிரிவில் இந்திய வீரர்கள் யாரும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறாத நிலையில், பெண்கள் பிரிவில் குவாலிஃபயரில் முதலிடம் பிடித்த வைஷாலி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினார். காலிறுதியில் சீனாவின் ஜூ ஜைனரை 2.5:1.5 என்ற கணக்கில் வென்ற வைஷாலி, அரையிறுதியில் சீன வீராங்கனை ஜூ வெஞ்சுனிடம் 0.5:2.5 என்கிற கணக்கில் தோற்றார்.
பெண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்துக்கு சீனாவின் ஜூ வெஞ்சுனும், லீ டிங்ஜீயும் Lei Tingjie மோதினார்கள். முதல் நான்கு போட்டிகள் டிராவில் முடிய , டை பிரேக்கர் போட்டிகள் நடந்தன. அதிலும் முதல் போட்டி டிராவாக, அடுத்த போட்டியில் ஜூ வெஞ்சுன் 44 மூவ்களில் லீ டிங்ஜீயை வென்றார்.
ஜீன்ஸ் அணிந்ததன் காரணமாக எழுந்த சர்ச்சையில் உலக செஸ் ரேபிட் சாம்பியன்ஷிப் போட்டிகளிலிருந்து விலகினார் மேக்னஸ் கார்ல்சன். பேச்சுவார்த்தைக்கு பின்னர், உலக செஸ் ப்ளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட சம்மதம் தெரிவித்தார். ஜீன்ஸ் அணிவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
ஓப்பன் பிரிவு போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனும், இயன் நெப்போம்நியாட்சியும் மோதினார்கள். முதலிரண்டு சுற்றுக்களில் மேக்னஸ் கார்ல்சன் வென்றுவிட, கோப்பையை கார்ல்சன் தக்க வைக்கப்போகிறார் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்று கம்பேக் கொடுத்தார் நெப்போம்நியாட்சி. அதனால், போட்டி டை பிரேக்கர் நோக்கி நகர்ந்தது. டை பிரேக்கரில் மூன்று போட்டிகள் டிராவில் முடிந்தன. கோப்பையை பகிர்ந்து கொள்ளலாமா என நெப்போம்நியாட்சியின் கேட்டார் கார்ல்சன். அவரும் சம்மதிக்க, கோப்பை பகிர்ந்து கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
உலக ப்ளிட்ஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதன்முறையாக இருவருக்கு கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது. இது மிகவும் மோசமான முடிவு என ஹேன்ஸ் நீமேன் உட்பட சில கிராண்ட் மாஸ்டர்கள் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.
உலக ப்ளிட்ஸ் சாம்பியன்ஷிப் கோப்பையை கார்ல்சன் வெல்வது எட்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.