உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற குகேஷை, மேக்னஸ் கார்ல்சன் பாராட்டியிருந்தார். இருந்தபோதிலும், குகேஷ் - டிங் லிரன் இடையேயான போட்டியானது, இரண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியாளர்கள் மோதியது போன்று இல்லை என தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக சர்வதேச ஊடகத்திடம் பேட்டியளித்த குகேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், கார்ல்சனின் விமர்சனத்தால் காயமடையவில்லை என தெரிவித்தார்.
செஸ் என்பது விளையாட்டு திறனை பற்றியது மட்டுமல்ல என கூறிய குகேஷ், குணம், தளராத மன உறுதியும் வெற்றியை தீர்மானிக்கும் என தெரிவித்தார். அவற்றை இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், தான் நன்றாக வெளிப்படுத்தியாக கருதுவதாகவும் அவர் கூறினார்.
இந்தவகையில், உலக செஸ் சாம்பியன்ஸ்ஷிப் இறுதி போட்டி தொடர்பான விமர்சனங்களுக்கு, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் ஆர்கடி டிவோர்கோவிச் எதிர்வினையாற்றியுள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஸ்ஷிப் போட்டி தரமானதாக இல்லை என, விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, குகேஷூடன் மோதிய டிங் லிரன் செய்த மோசமான தவறை முன் வைத்து, இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ரஷ்யாவின் செஸ் கூட்டமைப்பு தலைவர், டிங் லிரன் வேண்டுமென்றே தோல்வியடைந்தது போல் உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் டிவோர்கோவிச், இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார். ”விளையாட்டு என்றால் தவறுகள் இருக்கத்தான் செய்யும் எனவும், தவறுகள் இல்லையென்றால் கால்பந்தில் கோல்களே அடிக்க முடியாது .” எனவும் அவர் கூறியுள்ளார்.