ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 175 ரன்கள் குவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் இடையே இன்று நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்கத்திலேயே அமபத்தி ராயுடு 1 (8) ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆகினார். அவரைத் தொடர்ந்து வாட்சன் 13 (13) ரன்களில் வெளியேற, பின்னர் வந்த கேதர் ஜாதவ் 8 ரன்களிலேயே நடையை கட்டினார்.
இதனால் 27 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி தடுமாறியது. அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ரெய்னா மற்றும் கேப்டன் தோனி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 36 (32) ரன்களில் ரெய்னா அவுட் ஆக, அதன்பின்னர் வந்த பிரவோ அதிரடியை வெளிப்படுத்தினார். இதற்கிடையே தோனி அரை சதம் அடித்து அரங்கத்தை அதிரச் செய்தார்.
பின்னர் 27 (16) பிரவோ விக்கெட்டை இழந்தார். ஆனால் இறுதி வரை அவுட் ஆகாமல் விளையாடி தோனி, கடைசி ஓவரில் சிக்ஸர் மழை பொழிந்தார். இதனால் சென்னை ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கினர். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. தோனி 46 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் ராயல் அணியில் ஜோஃப்ரா ஆர்ஜெர் 2 விக்கெட்டுகளை எடுத்தார். ஜடேஜா 3 பந்தில் ஒரு சிக்ஸர் உட்பட 8 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.