விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டி; சாதிப்பாரா சென்னை சிறுமி?

Sinekadhara

சென்னை கண்ணகி நகர் காவல் உதவி ஆய்வாளரின் மகள் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அந்தச் சிறுமியின் சாதனைப் பயணம் குறித்து தற்போது பார்க்கலாம்.

12 வயதாகும் அஷ்வினிகா, தனது 3வது வயதில் சதுரங்க ஆட்டத்தின் காய்களை நகர்த்த பழக தொடங்கியவர். இன்று 12வயதுக்குட்பட்டோர் சதுரங்க தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் 9வது இடம் பிடித்துள்ளார். முதல் பத்து இடங்களுக்குள் தமிழ் நாட்டில் இருந்து அஷ்வினிகா ஒருவரே இடம் பெற்றுள்ளார். கண்ணகி நகர் உதவி ஆய்வாளராக தற்போது பணிபுரியும் ரத்தின குமார், தனது மகள் அஷ்வினிகாவுக்கு சிறு வயது முதலே சதுரங்கம் மீதான ஆர்வத்தையூட்டி, சிறந்த பயிற்சியாளர்களிடம் சதுரங்க பயிற்சி அளித்துள்ளார். அஷ்வினிகாவும் 8 வயது முதலே தேசிய சர்வதேச போட்டிகளில் பங்குபெறும் அளவிற்கு சதுரங்க போட்டியில் தனது திறமையை வளர்த்துள்ளார். இதற்காக ஆர்வமுடன் நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் சதுரங்க பயிற்சியை அஷ்வினிகா பெறுவதாக கூறுகிறார், அஷ்வினிகாவின் தந்தையும், உதவி காவல் ஆய்வாளருமான ரத்தின குமார்.

2019ல் சீனாவில் நடைபெற்ற சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இலங்கையில் நடைபெற்ற ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் 10 வயத்துக்குட்பட்டோருக்கான பிரிவில் தேர்வாகி அடுத்தடுத்த சுற்றுகளுக்கான பரிசுகளை வென்றுள்ளார். அதே போல் 2019ல் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்றார். 2021 மார்ச்சில் கொரோனா காரணமாக ஆன்லைன் வழியே நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 9வது இடத்தை பிடித்தார். தற்போது உலக செஸ் பிடரேஷன் நடத்தும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் சார்பில் ஆகஸ்ட் மாதத்தில் விளையாட உள்ளார் அஷ்வினிகா.

வெளிநாடுகளில் அஷ்வினிகா போட்டிக்கு செல்லும் போது தாய் பத்ம பிரியா உடன் அழைத்து செல்கிறார். கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக ஆன்லைன் வழியே தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கெடுத்து வருகிறார் இளம் நம்பிக்கை நட்சத்திரம் அஷ்வினிகா ரத்தின குமார். 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆகும் கனவுடன் சதுரங்க போட்டிகளில் வெற்றிகளை குவித்து வரும் அஷ்வினிகாவிற்கு சர்வதேச போட்டிகளில் பங்கு பெறுவதற்கு அரசு ஊக்கமும் உதவியும் கொடுத்தால் உறுதுணையாக இருக்கும்.