விளையாட்டு

விசில் போடத் தயாராகும் சென்னை ரசிகர்கள்

விசில் போடத் தயாராகும் சென்னை ரசிகர்கள்

webteam

10வது ஐபிஎல் போட்டிகள் நேற்றோடு நிறைவடைந்துள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடை காலம் முடிந்து அடுத்த ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தோனி பங்கேற்ற புனே அணி தோல்வியை சந்தித்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சென்னை அணியின் தடைக்காலம் நிறைவடைந்த மகிழ்ச்சியை #ManyHappyReturnsofCSK என்ற டாக் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த டாக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

நேற்று நடைபெற்ற 10வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. பரபரப்பான இந்த இறுதிப்போட்டியில், மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக சேம்பியன் பட்டத்தை வென்றது. சென்னை அணியின் கேப்டன் தோனி விளையாடிய புனே அணி வெற்றி பெற வேண்டும் என்று சென்னை ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் நூல் இழையில் புனே அணி வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டது. இதனால் சென்னை ரசிகர்கள் ஏமாற்றம் அடையவில்லை. மாறாக, அடுத்த ஆண்டு நடைபெறும் 11வது ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கலந்துகொள்வதால் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விசில் போடு, எங்க தல தோனிக்கு பெரிய விசிலு அடிங்க என்று #ManyHappyReturnsofCSK என்ற ஹேஷ்டாக்கில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கின்றனர்.